search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நண்பர்களிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார்- என்ஜினீயர் தற்கொலையில் புதிய தகவல்
    X

    நண்பர்களிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார்- என்ஜினீயர் தற்கொலையில் புதிய தகவல்

    • நண்பர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதும், அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதும் தெரியவந்தது.
    • கடிதத்தில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும் என்று எழுதியிருந்தார்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி.நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). என்ஜினீயர்.

    இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். ஆரம்பத்தில் வருமானம் வந்ததால், தொடர்ந்து ஆன்லைன் விளையாடினார். ஆனால் பணத்தை இழந்துவிட்டார். தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் இழந்தார்.

    இந்த நிலையில், கோவை ராம்நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சங்கர் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அறிந்த காட்டூர் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    கடிதத்தில் ஆன்லைனில் விளையாடுவதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. நண்பர்கள் என்னை மன்னிக்கவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.

    அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சங்கர் எவ்வளவு பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார் என்று விசாரித்தனர்.

    விசாரணையில், சங்கர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தான் அவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாட தொடங்கி உள்ளார்.

    முதலில் விளையாடியபோது அவருக்கு வருமானம் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் மேற்கொண்டு தான் கையில் வைத்திருந்த பணம் மற்றும் வெற்றி பெற்றதில் வந்த பணத்தையும் செலுத்தி விளையாட தொடங்கினார். ஆனால் முதலில் வந்த மாதிரி இந்த முறை வருமானம் வரவில்லை.

    இதனால் தான் இழந்த பணத்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என நினைத்தார். இதற்காக தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடினார். இதுவரை தனது நண்பர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதும், அந்த பணத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து விட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து சென்னையில் இருந்து அவர் கோவைக்கு வந்தார். இங்கும் இழந்த பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டும், தோல்வியே மிஞ்சியதால் வேதனை அடைந்தார்.

    தொடர்ந்து பணத்தை இழந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கோவைக்கு வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு கூட ஊட்டிக்கு சென்ற அவர் அங்கும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் அதனை கைவிட்டதும் தெரியவந்தது. 2 முறை தற்கொலைக்கு முயன்ற அவர், 3-வது முயற்சியில் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இருப்பினும் பணம் கொடுத்தவர்கள் யாராவது மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டரா? என்ற கோணத்திலும் காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×