search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடநாடு வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படையுங்கள்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
    X

    கொடநாடு வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படையுங்கள்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

    • ஏற்கனவே அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு மூலை முடுக்கு முதல் கிராமம், பட்டிதொட்டி வரை சென்றடைந்தது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் சாமியை தரிசனம் செய்தேன்.

    கேள்வி:- கொடநாடு என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கு குலை நடுக்கம் ஏற்படுகிறது என்று தி.மு.க. அதிகாரப்பூர்வ முரசொலி பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார்களே? உண்மையை சொல்லத் தயார் என்று அவர் ஏன் சி.பி.சி.ஐ.டி.க்கு வரவில்லை? வந்திருந்தால் நம்பலாம்? என்று அதில் கூறி இருக்கிறார்களே?

    பதில்:- நான் சட்டசபையிலே இதுபற்றி கேட்டேனே? அப்போதே முதலமைச்சர் சொல்லியிருக்கலாம். பல கேள்விகள் எழுப்பினேன். அப்போது ஏன் வாய்மூடி இருந்தார்கள். இவர்கள் வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள்.

    ஒரு முதலமைச்சர் இருக்கிறபோது பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எத்தனை பேர் இறந்தார்கள். அதையெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோமா? திருப்பி கொண்டு வரமாட்டோமா?

    அ.தி.மு.க. ஆட்சியின்போது ஒரு சம்பவம் நடைபெறுகிறது. நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறுகிறது. இதை மட்டும் ஏன் மையமாக வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஏற்கனவே அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    நான் இதுபற்றி அடிக்கடி தெளிவுபடுத்தி உள்ளேன். இதுபற்றி சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். ஏன் அவர்கள் அதைப்பற்றி மட்டும் குறிப்பிடவில்லை?

    அந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு. குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அரசு. வழக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்றது. அப்போது அந்த குற்றவாளிகளுக்கு வாதாடுவதற்கு, ஆஜரானது தி.மு.க. வழக்கறிஞர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடி இருக்கிறார். இதை ஏன் சொல்லமாட்டேன் என்கிறார்கள். நீங்களும் வெளியிடுவது கிடையாது. தெளிவுப்படுத்தியது கிடையாது.

    இதில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள். இதில்தான் சந்தேகம் ஏற்படுகிறது.

    நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். இந்த அரசுக்கு சொல்கிறேன். இதை ஏன் சி.பி.ஐ. விசாரிக்க கூடாது. சி.பி.ஐ.க்கு உத்தரவிடுங்கள். சி.பி.ஐ. விசாரிக்கட்டும். நீங்கள் தான் சந்தேகம் இருக்கிறது என்கிறீர்கள். சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படையுங்கள்.

    இந்த ஜாமீன்தாரருக்கும், கொலை குற்றவாளிக்கும் என்ன சம்பந்தம்? இந்த கொலை குற்றவாளிகள் எல்லோரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல் என இப்படி கொடும் குற்றம் புரிந்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு கேரளாவில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    அப்படி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கொடும் குற்றவாளிகளுக்கு தி.மு.க. வழக்கறிஞர் ஆஜராகி வாதாடி வருவதற்கு என்ன காரணம்?

    தி.மு.க. கட்சியை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு ஜாமீன்தாரராக இருப்பதற்கு என்ன பின்னணி, என்ன தொடர்பு இருக்கிறது? அதுதான் எங்களது கேள்வி. வழக்கு நடந்த சூழலில் இடையில் 15 மாத காலம் கொரோனா காலத்தில் நீதிமன்றம் நடைபெறவில்லை. அதுதான் காலதாமதம். பிறகு இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் இதை விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லி ஐ.ஜி. தலைமையில் விசாரணையை மேற்கொண்டனர்.

    அந்த ஐ.ஜி., அவருக்கு கீழ் டி.ஐ.ஜி., எஸ்.பி., ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., இத்தனை பேர் இருந்து விசாரித்து நீதிமன்றத்தில் சுமார் 790 பக்கம் அறிக்கை தாக்கல் செய்ததாகவும் 90 சதவீதம் வழக்கு முடிந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தகவல்.

    அப்படியிருக்கும்போது ஏன் மறுபடியும் சி.பி.சி.ஐ.டி.க்கு போகிறீர்கள். உங்கள் அரசாங்கம் தானே நியமித்தது? அதில் என்ன சந்தேகம்?

    ஒரு ஐ.ஜி. தலைமையில் இவ்வளவு விசாரணை மேற்கொண்ட பிறகு 10 சதவீதம் விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்? ஆனாலும் எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியவில்லை. அதனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை அடிக்கடி இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதை அடிக்கடி நீங்களும் கேட்க நானும் பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.

    இதுபற்றி சட்டமன்றத்திலும் நேருக்கு நேர் முதலமைச்சரிடம் கேட்டுவிட்டேன். வழக்கை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க வேண்டியதுதானே? உங்கள் அரசாங்கத்தின் விசாரணை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?

    இப்போது இவர் முதலமைச்சராக இருக்கிறார். ஒரு கொலை நடந்தால் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டினால் அவர் ஏற்றுக்கொள்வாரா?

    கேள்வி:- ஏன் பதறுகிறீர்கள் என்று கேட்கிறார்களே?

    பதில்:- நான் பதறவில்லை. நான் பலமுறை அறிக்கை வாயிலாக சொல்லிவிட்டேன். பேட்டியின்போதும் விளக்கமாக கூறியுள்ளேன். நீங்கள் ஏன் அந்த ஜாமீன்தாரரை விசாரிக்க மறுக்கிறீர்கள்? அதில் தானே உண்மை வெளிவரும்.

    குற்றம் புரிந்தவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். கொடும் குற்றம் புரிந்த இவர்களுக்கு தி.மு.க. கட்சியை சேர்ந்தவர் எதற்கு ஜாமீன்தாரராக இருக்கிறார்? அதுதான் மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது.

    கேள்வி:- உண்மை வெளி வந்துவிடும் என சி.பி.ஐ. விசாரணைக்கு தி.மு.க. தயங்குகிறார்களா?

    பதில்:- அப்படித்தான் தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×