search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
    X

    கோவையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் டாஸ்மாக் சூப்பர்வைசர் வீடு.

    கோவையில் டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    • டாஸ்மாக் சூப்பர் வைசர் முத்துபாலன் வீட்டிற்கு இன்று காலை 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
    • அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு 10 பேர் அதிவிரைவுபடை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.

    நெல்லையை சேர்ந்தவர் முத்துபாலன்(வயது40). இவர் கோவை டவுன்ஹாலில் டாஸ்மாக் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவரது வீடு கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ளது.

    இந்த நிலையில் இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு 2 கார்களில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்ததும், வேறு யாரும் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி நுழைவாயில் மற்றும் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டனர்

    பின்னர் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று, அங்குலம் அங்குலமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின்போது அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.

    அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு 10 பேர் அதிவிரைவுபடை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வீட்டின் முன்பு யாரும் கூடிவிடாத வகையிலும், உள்ளே யாரும் நுழையாத வண்ணமும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கோவை ராமநாதபுரம் ஷியாம் நகரை சேர்ந்தவர் அருண். இவர் திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியில் அருண் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இன்று காலை இவரது அலுவலகத்துக்கு 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அலுவலகத்தின் வாயிலின் கதவை மூடி விட்டு சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையை முன்னிட்டு அங்கு மத்திய அதிவிரைவுபடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அருண் கரூரில் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடு ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    கோவையில் முதல் முறையாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது இங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×