search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்துக்கு அனுமதி தர கோரி கவர்னரை மீண்டும் சந்திக்க தி.மு.க. முடிவு
    X

    ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்துக்கு அனுமதி தர கோரி கவர்னரை மீண்டும் சந்திக்க தி.மு.க. முடிவு

    • உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் தி.மு.க. சார்பிலும், தோழமை கட்சிகள் சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வேறு கருத்தை சொல்ல முடியாது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கான முன் முடிவு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டமசோதா குறித்து கவர்னர் எந்தவிதமான விளக்கமும் இதுவரை கேட்கவில்லை. அவசர கூட்டத்திற்கு அனுமதி கிடைத்து விட்டது.

    அதில் உள்ள ஷரத்துகள் தான் இதிலும் உள்ளன. சந்தேகம் ஏற்பட வாய்ப்பு இல்லை. கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவுதான். இருந்தாலும் ஏன் மசோதாவுக்கு அனுமதி தராமல் வைத்து இருக்கிறார் என்று சொல்ல முடியாது.

    அதனால் கவர்னரை நானும் உள்துறை மற்றும் சட்டத்துறை செயலாளரும் நேரில் சென்று சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம். இன்றோ அல்லது நாளையோ சந்திக்க நேரம் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். இதுகுறித்து அவரிடம் விளக்கி எடுத்து கூறுவோம்.

    உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் தி.மு.க. சார்பிலும், தோழமை கட்சிகள் சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மனு செய்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு சில பார்ட்டிகளில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

    எனவே தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்படும் மறு சீராய்வு மனு தமிழக அரசு மனுவாகத்தான் இருக்கும். எல்லா கருத்துக்களையும் உள்வாங்கி சிறப்பான சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அன்று பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல் முறையீடு செய்யும்போது தகுந்த வாதங்களை எடுத்து வைத்து ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர சட்ட பாதுகாப்பை தேடி தருவோம்.

    ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. வேறு கருத்தை சொல்ல முடியாது. காங்கிரஸ் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளனர். எல்லோருக்கும் சட்ட போராட்டம் நடத்த உரிமை உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×