search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது எப்படி?- பாதுகாவலர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது எப்படி?- பாதுகாவலர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

    • கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன்.
    • ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கோவை:

    கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார் (வயது 45). இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி.

    விஜயகுமார் கோவை டி.ஐ.ஜி. அலுவலகம் அருகே உள்ள முகாம் அலுவலகத்திலேயே (வீடு) குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    நேற்று காலை காலை 6 மணி அளவில் தனது வீட்டில் இருந்த டி.ஐ.ஜி விஜயகுமார், அறையை விட்டு வெளியில் வந்தார். அங்கிருந்த தனது பாதுகாவலரான ரவிச்சந்திரனிடம் கைத்துப்பாக்கியை வாங்கி கொண்டு வீட்டிற்குள் சென்றவர் திடீரென தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சியான பாதுகாவலர் சக போலீசார் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சியாகினர். டி.ஐ.ஜி. விஜயகுமாரின் மனைவி கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகளும் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு அவரது உடலுக்கு டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் 2 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்ததும், இதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும் மன அழுத்தம் காரணமாகவே அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மன அழுத்தத்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பாதுகாவலரான ரவிச்சந்திரன், டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் புகார் அளித்துள்ள போலீஸ்காரர் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    எனது பெயர் ரவிச்சந்திரன். நான் கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தேன். ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 2016-ம் ஆண்டு முதல் நான் கோவை சரக டி.ஐ.ஜி.க்கு தனி பாதுகாப்பு காவலராக இருந்து வருகிறேன். இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து, 183 என்ற 9 எம்.எம் ரக கைத்துப்பாக்கி வழங்கப்பட்டது.

    எனக்கு டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நான் தங்கி இருந்து பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் டி.ஐ.ஜி விஜயகுமார் இங்கு வந்தார். அவர் வந்த நாளில் இருந்தே தனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மாத்திரை எடுத்து கொள்கிறேன் என்று தெரிவிப்பார். தினமும் தூக்கத்திற்காக மாத்திரை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    கடந்த 6-ந் தேதி நான் முகாம் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது டி.ஐ.ஜி. குடும்பத்துடன் வெளியில் சென்றார். பாதுகாப்புக்காக நாங்களும் சென்றோம். பின்னர் இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து விட்டோம். இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. வீட்டிற்குள் சென்று ஓய்வெடுத்தார்.

    வழக்கமாக டி.ஐ.ஜி விஜயகுமார் தினமும் காலை 7 மணிக்கு அலுவலகத்தில் உள்ள டி.எஸ்.ஆர் அறைக்கு வந்து டி.எஸ்.ஆரை (தினமும் பதிவாகும் வழக்கு விவரங்கள்) பார்ப்பது வழக்கம்.

    ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக காலை 6.30 மணிக்கெல்லாம் டி.எஸ்.ஆர். அலுவலகத்திற்கு வந்து விட்டார். அப்போது முகாம் அலுவலகத்தில் இருந்த ரவிவர்மா என்பவரிடம் பால் கேட்டார். அவரும் பால் காய்ச்சி கொடுக்கவே அதனை அவர் குடித்தார்.

    இதைபார்த்த நான் டி.எஸ்.ஆரை எடுத்து கொண்டு அவரிடம் செல்ல முயன்றேன். ஆனால் அதற்குள்ளாகவே சரியாக 6.40 மணிக்கெல்லாம் அவரே டி.எஸ்.ஆர் கேட்டு நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து விட்டார்.

    அங்கு வந்தவர் ரவிச்சந்திரன் டி.எஸ்.ஆர் எங்கே கொடுங்கள், பார்ப்போம் என கேட்டார். நானும் அதனை கொடுக்க, அதனை வாங்கி பார்த்தார். பின்னர் நான் பயன்படுத்தும் துப்பாக்கி வைத்திருந்த இடத்துக்கு டி.ஐ.ஜி. சென்றார்.

    அங்கு சென்றவர் அந்த துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் அதனை பார்த்தார். அதனை பார்த்து விட்டு இந்த துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என என்னிடம் கேட்டார்.

    நான் சொல்லி கொண்டு இருந்த போதே துப்பாக்கியுடன் அவர் வெளியில் சென்று விட்டார். உடனே நான் டி-சர்ட் அணிந்து கொண்டு வெளியில் வர முயன்றேன். அதற்குள் வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நானும், என்னுடன் இருந்த டிரைவர் அன்பழகனும் ஓடி வந்து பார்த்தோம். அப்போது டி.ஐ.ஜி. மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். என்னிடம் இருந்து எடுத்து சென்ற துப்பாக்கி அவரின் அருகிலேயே கிடந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான நாங்கள் இதனை அவரது மனைவியிடம் தெரிவிக்க சத்தம் போட்டு கொண்டே ஓடினோம். எங்களது சத்தம் கேட்டு, அவரும் ஓடி வந்து என்ன என்று கேட்டார். நாங்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனடியாக அனைவரும் சேர்ந்து, முகாம் அலுவலகத்தில் இருந்து ஒரு காரில் உயிருக்கு போராடிய டி.ஐ.ஜியை தூக்கிக்கொண்டு காலை 7 மணியளவில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.

    செல்லும் வழியிலேயே இதுபற்றிய தகவலை உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டேன். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, டி.ஐ.ஜி. இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அவர் சுட்டு கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×