search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நெல்லை-திருச்செந்தூருக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?
    X

    கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நெல்லை-திருச்செந்தூருக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?

    • வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு நாளொன்றுக்கு சராசரியாக லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

    தென்காசி:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    ஆன்மீக சுற்றுலா தலமான இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரெயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் ரெயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு நாளொன்றுக்கு சராசரியாக லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கிறது. கந்தசஷ்டி விழா மற்றும் விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

    திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் 18 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு ஒரு நடைமேடையும், 12 பெட்டிகள் நிறுத்தும் இரு நடைமேடைகளும் உள்ளது. இந்த 3 நடைமேடைகளையும் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிப்பதோடு, மேலும் 2 நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்பது பக்தர்கள் எதிர்பார்ப்பு.

    நெல்லை - திருச்செந்தூர் ரெயில் வழித்தடத்தில் இரவு நேரப் பணியாளர்கள் இல்லாததும் கூடுதல் ரெயில் வழி இயக்க தடங்கலை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தற்போது திருநெல்வேலி, திருச்செந்தூர் ரெயில் வழித்தடத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், மணியாச்சி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- திருச்செந்தூர் ரெயில்கள் 4 ஜோடி என மொத்தம் 7 ரெயில்கள் தற்போது இயங்கி வருகின்றன. இரவு நேர பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்து 24 மணி நேரம் ரெயில்கள் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 1 மணி நேரத்துக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் தொடர்ந்து ரெயில்களை இயக்க வேண்டும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் லட்சக்கணக்கான முருக பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு தெற்கு ரெயில்வேக்கும் நல்ல வருமானத்தை கொடுக்கும். எனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தெற்கு ரெயில்வேக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×