என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் 28 மணி நேரத்தில் 33.25 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது
- கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
- தொடர்ந்து மழை நீடித்ததால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கடலூர்:
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்றதால் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதோடு கடலூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இதையொட்டி நேற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்து நீடித்தது. சுமார் 28 மணி நேரம் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது.
இதனால் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 307.9 மி.மீ. மழை பெய்துள்ளது.
மாவட்டம் முழுவதும் 3325.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 33.25 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. தொடர் மழை காரணமாக கடலூர் நகர் பகுதியான குண்டு உப்பலவாடி, பாதிரிகுப்பம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து மழை நீடித்ததால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி பகுதியில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் சாலை எது என்று தெரியாமல் வாகனங்கள் தத்தளித்து சென்றன. வயல் பகுதியும், சாலையும் ஒன்றுபோல் தண்ணீரில் மிதந்ததால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்திலேயே சென்றனர். கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கனமழைக்கு காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 13 கால்நடைகள் இறந்துள்ளன. 23 குடிசை வீடுகள் கனமழைக்கு சேதமாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் தண்ணீர் வெளியேற வழியில்லாததால் கவலையில் உள்ளனர்.








