search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டம் விட்ட நைலான் நூலில் சிக்கி தவித்த காகம்- 50 அடி உயரத்தில் ஏறி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
    X

    காகத்தின் காலில் சிக்கிய நைலான் கயிற்றை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்

    பட்டம் விட்ட நைலான் நூலில் சிக்கி தவித்த காகம்- 50 அடி உயரத்தில் ஏறி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

    • நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தான், கரையும் காகத்தின் கால்களில் கயிறு சுற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • தீயணைப்பு வீரர்கள், பெரும் முயற்சி எடுத்து காகத்தின் கால்களில் இருந்த நைலான் கயிற்றை அகற்றினர்.

    நாகர்கோவில்:

    குழந்தைகள் முதல் சிறுவர்-சிறுமிகள் வரை பலரும் காற்று காலத்தில் பட்டம் விட்டு விளையாடுவது வழக்கம். ஆனால் இந்த விளையாட்டு சில நேரங்களில் வினையாக மாறி உயிர்ப்பலியும் வாங்கி வருகிறது. குறிப்பாக பட்டம் உயரத்தில் பறக்க சிலர் பயன்படுத்தும் மாஞ்சா கயிறு தான் உயிர்பலிக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

    மனிதர்கள் மட்டுமே, பட்டம் விடும் நூலால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், காகம் ஒன்றும் அதில் சிக்கி பறக்க முடியாமல் தவிப்புக்கு உள்ளானது. மரக்கிளையில் நின்று கொண்டு அது கரைந்து கொண்டே இருப்பதை பார்த்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து காகத்தை மீட்டனர். இது நடந்திருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான்.

    இந்த மாவட்டத்தில் மரங்கள் நிறைந்த இயற்கை எழில் சார்ந்த பகுதிகள் ஏராளமாக உள்ளன. இதனால் பறவை இனங்கள் அதிகமாக காணப்படுகின்றன. நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள வாத்தியார்பிள்ளை பகுதியில் வசிப்பவர் கோபாலன். இவரது வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் இருந்து காகம் ஒன்று விடாமல் கரைந்துகொண்டே இருந்தது. கூடி வாழும் பழக்கம் கொண்ட காகங்கள், அங்கு கூட்டம் சேர்ந்து சக தோழனின் உதவிக்கு வந்தன.

    ஆனால் அவற்றால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. தொடர்ந்து மரக்கிளையில் இருந்த காகம் கரைந்து கொண்டே இருக்க தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்த்தனர். எதற்காக காகம் கரைகிறது என அவர்களுக்கும் முதலில் தெரியவில்லை.

    நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தான், கரையும் காகத்தின் கால்களில் கயிறு சுற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர் ஒருவர் சுமார் 50 அடி உயரத்தில் உள்ள மரக்கிளையில் ஏறி, காகத்தை பிடித்தார். அதன் கால்களில் சுற்றப்பட்டிருந்தது, சிறுவர்கள் பட்டம் விட பயன்படுத்தும் நைலான் கயிறு என அப்போது தெரியவந்தது. அது இறுக்கியதால் பறக்க முடியாமல் காகம் கரைந்துள்ளது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், பெரும் முயற்சி எடுத்து காகத்தின் கால்களில் இருந்த நைலான் கயிற்றை அகற்றினர். அதன்பிறகு காகம் சுதந்திர வானில் சிறகடித்துச் சென்றது.

    Next Story
    ×