search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பருவமழை இல்லாததால் களையிழந்த குற்றாலம் சீசன்: வியாபாரம் பாதிப்பு
    X

    தண்ணீர் வரத்து இல்லாததால் பாறைகளாக காட்சியளிக்கும் அருவிகள் - சுற்றுலா பயணிகள் இல்லாததால் வெறிச்சோடி காணப்படும் பழக்கடை

    பருவமழை இல்லாததால் களையிழந்த குற்றாலம் சீசன்: வியாபாரம் பாதிப்பு

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.
    • சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டி காணப்படும்.

    குற்றாலத்தில் அமைந்துள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தென்மேற்கு பருவமழை பொழியும் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி அடர்ந்த வனப்பகுதியின் இடையே வரும் அருவி நீரானது வனப்பகுதியில் இருக்கும் மூலிகை செடிகள் மரங்களை கடந்து வருவதால் மூலிகை நிறைந்த குறிப்பாக பிணிகளை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாக குற்றால அருவிகள் பார்க்கப்பட்டு வருகிறது.

    இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்த குளியல் போடுவர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.

    ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு போதிய அளவில் பெய்யவில்லை. சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த 2 மாதங்களில் அவ்வப்போது மட்டும் மழை பெய்து கண்ணாமூச்சி காட்டுகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் போதிய நீரோட்டம் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது. இதனால் கடந்த ஆண்டு குற்றால அருவியில் குளித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது பல மடங்கு குறைந்தது.

    குற்றாலத்தில் முழுமையாக சீசன் இல்லாததால் சீசனை எதிர்பார்த்து அமைக்கப்பட்டு இருந்த வியாபார நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வாடகை வாகனங்கள் என சுற்றுலா துறையை நம்பியே லட்சக்கணக்கான பணம் முதலீடு செய்தவர்கள் பலரும் போதிய வருமானமின்றி புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மலைவாசல் தளங்களில் கிடைக்கும் பழ வகைகள் அனைத்தையும் சீசன் காலங்களில் குற்றாலம் வரும் பயணிகளின் கண் முன்னே காண்பித்து அவர்களை ருசிக்க வைக்க நினைத்த வியாபாரிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது.

    சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×