என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீலகிரியில் 3-வது நாளாக மழை நீடிப்பு: அவலாஞ்சியில் 20 செ.மீ கொட்டியது
    X

    நீலகிரியில் 3-வது நாளாக மழை நீடிப்பு: அவலாஞ்சியில் 20 செ.மீ கொட்டியது

    • பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் பெய்த மழைக்கு அங்குள்ள அரசு பள்ளியின் அருகே நின்ற மரம் முறிந்து பள்ளி மீது விழுந்தது.

    ஊட்டி:

    தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே நேற்று காலை முதலே மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. அவலாஞ்சி, அப்பர் பவானி பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    2 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் அந்த அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர தொடங்கி உள்ளது.

    குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்துகொண்டே இருந்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்றும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.

    இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.

    தேயிலை தோட்டங்களில் பணியாளர்கள் பிளாஸ்டிக் போர்வைகளை அணிந்தபடி தங்களது பணியில் ஈடுபட்டனர்.

    பர்னில் சாலை, குழிச்சோலை சாலை, சி.எஸ்.ஐ. பள்ளி பகுதி, தலைக்குந்தாவில் இருந்து அத்திக்கல் செல்லும் சாலை, ஓவேலி-பாலவாடி சாலை, தேவர்சோலை-சர்க்கார் மூலை, சேரங்கோடு அடுத்த அய்யன் கொல்லியின் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலை, மேல்குன்னு சாலை உள்பட 8 இடங்களில் மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்தன.

    இதனால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    கூடலூர் அடுத்த ஓவேலி பகுதியில் பெய்த மழைக்கு அங்குள்ள அரசு பள்ளியின் அருகே நின்ற மரம் முறிந்து பள்ளி மீது விழுந்தது. இதில் மேற்கூரை லேசான சேதம் அடைந்தது.

    பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையால் எகோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி, பிதர்காடு உள்பட பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் இருளில் மூழ்கின.

    இதேபோல் மழைக்கு பந்தலூர், குன்னூர் பகுதிகளில் 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. மேலும் ஓவேலியில் வாகனத்தில் சென்ற ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    தொடர் மழைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டது. அவை உடனுக்குடன் தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்து றையினரால் அப்புறப்படுத்தப்பட்டன.

    குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள லாரி நிலையத்தில் பாரம் ஏற்றிய லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று பெய்த மழைக்கு ராட்சத மரம் ஒன்று சரிந்து லாரியின் மீது விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 20 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. நேற்று 18 செ.மீ மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-204, அப்பர் பவானி-110, சேரங்கோடு-93, பந்தலூர்-70, தேவாலா-68 கிளைன்மார்கன்-60, நடுவட்டம்-58, ஓவேலி-54, கூடலூர், பாடந்தொரை-44, செருமுள்ளி-42, எமரால்டு-41, மேல் கூடலூர்-40.

    Next Story
    ×