search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை:  மின்னல் தாக்கியதில் மீனவர் பலி
    X

    சாலையில் தேங்கி மழைநீரில் ஊர்ந்து செல்லும் கார்.

    டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: மின்னல் தாக்கியதில் மீனவர் பலி

    • டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
    • தொடர்ந்து பெய்து வரும் மழையால் சம்பா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    அதன்படி, தஞ்சையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. இன்று காலை விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதேபோல், மாவட்டத்தில் வல்லம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று மாலை அல்லது இரவும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையின் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சம்பா சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு செ.மீட்டரில் வருமாறு:-

    நீடாமங்கலம்- 5.4, திருவாரூர்- 3.3, குடவாசல்- 2.3, அதிகபட்சமாக நன்னிலத்தில் 6.6 செ.மீட்டர் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழையின் மொத்த அளவு 22.8 செ.மீட்டர் பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (10-ந் தேதி) மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

    இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர். அன்றாட வேலைகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குடை பிடித்தபடி செல்கின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    நாகப்பட்டினம்- 20, திருப்பூண்டி-5, வேளாங்கண்ணி-28, திருக்குவளை-5 அதிகபட்சமாக தலைஞாயிறில் 30 மி.மீட்டல் பதிவாகி உள்ளது.

    இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நேற்று முழுவதும் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்தது. பின்னர், இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று அதிகாலையும் சீர்காழி, கொள்ளிடம், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணபிரான். இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது அண்ணன் அருண் (வயது 38), மணிவேல், கவிராஜ், சுப்பிரமணியன் ஆகியோருடன் நேற்று மாலை தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதேபோல், மற்றொரு படகில் குட்டியாண்டியூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48) என்பவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    இந்நிலையில், இன்று அதிகாலை அனைவரும் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக படகில் இருந்து மீன்பிடித்து கொண்டிருந்த அருண் என்பவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். படகில் இருந்தவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பி படுகாயமடைந்த அருணை பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல், மற்றொரு படகில் மீன்பிடித்து கொண்டிருந்த ராஜேந்திரன் மீதும் மின்னல் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக படகில் இருந்தவர்கள் கரைக்கு திரும்பி ராஜேந்திரனை ஆம்புலன்சு மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அருண் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர்கள் கதறி அழுதனர். அவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    தகவல் அறிந்த தாசில்தார் சரவணன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன், பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த அருணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×