என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காசு கொடுத்தால்தான் போவேன்... அரசு பஸ்சை வழிமறித்து நின்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணால் பரபரப்பு
    X

    காசு கொடுத்தால்தான் போவேன்... அரசு பஸ்சை வழிமறித்து நின்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணால் பரபரப்பு

    • பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சுற்றித்திரிகின்றனர்.
    • பஸ்சை எடுக்க முடியாமல் திணறிய கண்டக்டர் ஆளைவிட்டால் போதும் என்று தன்னிடம் இருந்த சில்லரை காசுகளை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து சுற்றுப்புற கிராமப்புற பகுதிகளுக்கும் மற்றும் ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பரபரப்பாக காணப்படும் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள், பொதுமக்கள், கடைக்காரர்கள் பயணம் செய்ய வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் அவ்வப்போது அப்பகுதியில் நிற்கும் பொதுமக்களிடம் டீ வாங்கி கொடு, சாப்பாடு வாங்கி கொடு என்று கேட்டு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் காசு கொடு என்று பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளை பின் தொடர்ந்து சென்றும் தொந்தரவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட தயாரான அரசு பஸ்சை அப்பகுதியில் நின்ற மனநோயாளி பெண் ஒருவர் மறித்து நின்றுள்ளார். இதனால் டிரைவர் பஸ்சை இயக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த கண்டக்டர் பஸ்சின் முன்பகுதிக்கு சென்று அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நகர்ந்து செல்லுமாறு கூறினார். ஆனாலும் அந்த பெண் அந்த இடத்தை விட்டு நகரவில்லை, தலையில் கல்லை வைத்து கொண்டு நீண்ட நேரம் அவர் அப்படியே நின்றார்.

    இதனால் பஸ்சில் ஏறிய பயணிகள், கண்டக்டர், டிரைவர் என அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். ஒரு கட்டத்தில் அந்த பெண் காசு கொடு அப்போதுதான் போவேன் என்று அடம் பிடித்தார். பஸ்சை எடுக்க முடியாமல் திணறிய கண்டக்டர் ஆளைவிட்டால் போதும் என்று தன்னிடம் இருந்த சில்லரை காசுகளை அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். காசு வாங்கிய பிறகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து நகர்ந்துள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் மற்றும் டிரைவர் பஸ்சை அங்கிருந்து ஒட்டி சென்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் இந்த செயலால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அவதி அடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இதுபோன்று ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித்திரிகின்றனர். மாவட்ட நிர்வாகம் இவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×