என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெண் என்ஜினீயருடன் லெஸ்பியன் உறவு- கல்லூரி மாணவி பெற்றோருடன் செல்ல மறுப்பு
    X

    பெண் என்ஜினீயருடன் 'லெஸ்பியன்' உறவு- கல்லூரி மாணவி பெற்றோருடன் செல்ல மறுப்பு

    • பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் என்ஜினீயர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு குடும்பம் என்றால் பெண் தோழி தான். வாழ்ந்தால் இனி அவருடன் தான் வாழ்வேன் என்று மாணவி கூறினார்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். இவரும், பக்கத்து ஊரை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவரும் லெஸ்பியன் உறவில் இருந்து வந்தனர்.

    இந்தநிலையில், திடீரென மாணவி காணாமல் போனதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது மாணவி கோவையில் அந்த பெண் என்ஜினீயருடன் 'லெஸ்பியன்' ஜோடியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரும் கோவையில் இருந்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர். அங்கு போலீசார் விசாரணை நடத்தி இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது, மாணவி படித்த கல்லூரியில் சீனியர் மாணவியாக அந்த பெண் என்ஜினீயர் படித்தபோது இருவரும் லெஸ்பியன் உறவு ஏற்பட்டதும், இதையறிந்து மாணவியின் பெற்றோர் கண்டிக்கவே அவர் தனது காதலியான பெண் என்ஜினீயருடன் வாழ முடிவு எடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தெரியவந்தது.

    இந்தநிலையில், கவுன்சிலிங்கின்போது, அந்த பெண் என்ஜினீயர் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டது தவறோ என்று மனம் மாறிய நிலையில் திடீரென அங்குள்ள கழிப்பறைக்கு சென்று கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அந்த பெண் என்ஜினீயர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீனா சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றார்.

    அதன்பிறகு அந்த கல்லூரி மாணவியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தனது 'லெஸ்பியன்' ஜோடியான பெண் என்ஜினீயரை பார்க்க வந்தார். அப்போது அவர்கள் இருவரும் கட்டித்தழுவி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்டனர். பின்னர் அந்த மாணவியை போலீசார் அங்கிருந்து மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதனிடையே அந்த மாணவியை பெற்றோருடன் செல்லுமாறு போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் அந்த மாணவியோ கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்த நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக மாறி விட்டோம். எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு குடும்பம் என்றால் பெண் தோழி தான். வாழ்ந்தால் இனி அவருடன் தான் வாழ்வேன், பெற்றோருடன் செல்ல மாட்டேன், காப்பகத்துக்கு வேண்டும் என்றால் செல்கிறேன் என்று அந்த மாணவி கூறி உள்ளார். இதனால் அதிர்ந்து போன அனைத்து மகளிர் போலீசார் அந்த மாணவியை தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    Next Story
    ×