search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலகவுண்டன்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை
    X

    வேலகவுண்டன்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை

    • போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாயிடம் செயின் தொலைந்தது குறித்து எப்படி தெரிவிப்பது என்று மாணவன் புலம்பியதாக கூறப்படுகிறது

    பரமத்திவேலூர்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மஞ்சகன்னி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவரது மகன் விஜயன் (18). இவர் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி சிவில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று இரவு 10.30 மணிக்கு அறையில் இருந்து வெளியே வந்த விஜயன் 3-வது மாடியில் உள்ள வாயில் அருகில் உட்கார்ந்து கொண்டு செல்போனில் மெசேஜ் செய்து கொண்டிருந்தார்.

    இன்று காலை 6.30 மணிக்கு பிரேம் ஆனந்த் என்ற மாணவன் படிப்பதற்காக 3-வது மாடி படி அருகே சென்றபோது விஜயன் அங்கிருந்த அறை ஒன்றில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    அதிர்ச்சியடைந்த பிரேம் ஆனந்த் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்து போன மாணவர் நேற்று இரவு 11:30 மணி முதல் 12.30 மணி வரை அசோக் என்பவரிடம் தனது அம்மா வாங்கி கொடுத்த செயின் தொலைந்து விட்டதாக வருத்தமாக தெரிவித்துள்ளார்.

    மேலும் தாயிடம் செயின் தொலைந்தது குறித்து எப்படி தெரிவிப்பது என்று புலம்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×