என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரத்தில் மோட்டார் மூலம் அகற்றிய மழைநீர் மீண்டும் தேங்கிய இடத்துக்கே வந்தது- கலெக்டர் அதிர்ச்சி
- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- மின் மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் இயக்கியபோது மழை நீரை உறிஞ்சும் பகுதியிலிருந்து சரியாக மழை நீரை உறிஞ்ச முடியாததால் அதனுடன் மாநகராட்சி ஊழியர்கள் சில நிமிடங்கள் போராடினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கன மழையானது பெய்ய தொடங்கி அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் எம்.ஆர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியிலுள்ள லிங்கப்பன் பாளையம் தெருவில் காலையிலிருந்து பெய்த மழையினால் சாலையில் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை சிறிய மின் மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மின் மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் இயக்கியபோது மழை நீரை உறிஞ்சும் பகுதியிலிருந்து சரியாக மழை நீரை உறிஞ்ச முடியாததால் அதனுடன் மாநகராட்சி ஊழியர்கள் சில நிமிடங்கள் போராடினர்.
பின்னர் ஒரு வழியாக மோட்டாரின் ஒரு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த குழாய் மூலம் மழை வெள்ள நீரானது உறிஞ்சப்பட்டு மற்றொரு நீண்ட குழாய் மூலம் பக்கத்து தெருவிற்கு வெளியேறுவதற்கு முன்னதாகவே, குழாயில் இருந்த ஓட்டை வழியாக மழை வெள்ள நீரானது பீச்சி அடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் விழுந்தோடி மீண்டும் மழை நீர் தேங்கி நிற்கும் இடத்திற்கே வந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர், இவ்வாறு இருந்தால் மழை நீர் எவ்வாறு வெளியேறும், மின் மோட்டாரின் இயக்கத்தை நிறுத்தச் சொல்லுங்கள்.
பணியினை சரியாக மேற்கொள்ளுங்கள் என மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து உடனடியாக மின் மோட்டார் நிறுத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டரின் திடீர் ஆய்வின்போது மழை நீர் வெளியேற்றும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாகவே கையாண்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.






