என் மலர்
தமிழ்நாடு

கொடைக்கானல் நீர் தேக்கத்தில் விழுந்த சென்னை வாலிபர் மாயம்- போதை பொருளை தேடி வந்ததால் விபரீதம்

- நீர் தேக்கத்தில் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனுஷ் தவறி விழுந்தார்.
- நீர் தேக்கம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட போதை காளான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
கொடைக்கானல்:
சென்னை வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 25). கேரளாவைச் சேர்ந்த இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சென்னை வடபழனி சாலிகிராமம் காவேரி தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சந்துரு (18). நண்பர்களான இவர்கள் மேலும் சிலருடன் கடந்த 1-ந் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து விட்டு மேல்நிலை கிராமமான பூண்டி கிராமத்தில் தங்கி இருந்தனர். பின்னர் அங்கிருந்து கூக்கால் நீர் தேக்கம் பகுதிக்கு சென்றனர். தடை செய்யப்பட்ட இப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீர் தேக்கத்தில் நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனுஷ் தவறி விழுந்தார்.
உடனே அவரை காப்பாற்ற முயன்ற நண்பர்கள் முடியாமல் போகவே கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கொடைக்கானல் போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தனுசை தேடும் முயற்சியில் இறங்கினர். பின்னர் இரவு நேரமாகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
இன்று 2-ம் நாளாக மீண்டும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் தேக்கம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தடை செய்யப்பட்ட போதை காளான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து சமூக ஊடகங்களிலும் பிரசாரம் செய்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றனர்.
இதற்காக தடையை மீறி வரும் சுற்றுலா பயணிகள் போதையில் அணைப்பகுதியை சுற்றிப்பார்க்க செல்லும்போது விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே போலீசார் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கவும், போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.