search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவாரூர் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு
    X

    நீடாமங்கலம் அருகே ரிஷியூர் நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    திருவாரூர் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு

    • டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யும் உரிமையை தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்.
    • மத்திய குழுவினர் நீடாமங்கலம் அருகே அரிச்சாபுரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

    தஞ்சாவூா்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை கொட்டியது.

    பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான பல்லாயிரக்கணக்கான சம்பா நெற்பயிர்கள், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் பாதிக்கப்பட்டன.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டெல்டா மாவட்டங்களில் கடந்த 5-ந் தேதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதற்கு மறுநாள் 6-ம் தேதி முதலமைச்சரிடம் சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் பயிர் இழப்பீட்டு நிவாரணத் தொகையை முதலமைச்சர் அறிவித்தார்.

    தொடர்ந்து கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் தளர்வு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

    அதனை ஏற்று சென்னை தரக்கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூர் தர கட்டுப்பாட்டு மையம் அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் மனுக்கள் பெற்றனர். இன்று 2-வது நாளாக தங்களது ஆய்வை தொடர்ந்தனர்.

    அதன்படி முதலில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் என்ற இடத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களது ஆய்வை தொடங்கினர். கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் தன்மையை பரிசோதித்தனர். தாங்கள் கொண்டு வந்த எந்திரம் மூலம் ஈரப்பதம் எந்த அளவில் உள்ளது என்று சோதனையிட்டனர். பின்னர் நெல்லின் மாதிரிகளை சேகரித்துக் கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

    அப்போது விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதம் ஆனதோடு நெல்மணிகளின் ஈரப்பதம் 22 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது 19 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நாங்கள் நெல்மணிகளை உலர்த்த பாடுபட வேண்டி உள்ளது. போதுமான அளவில் உலர்களம் இல்லாததால் நெல்லின் ஈரப்பதம் குறைக்க முடியவில்லை. எனவே 22 சதவீதம் முறையிலான நெல்மணிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து நீங்கள் மத்திய அரசிடம் பேசி உடனடி தீர்வு காண வேண்டும். மேலும் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்யும் உரிமையை தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்.

    இதற்கு மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் கூறினர்.

    இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் நீடாமங்கலம் அருகே அரிச்சாபுரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அங்கும் விவசாயிகள் கொடுத்த மனுவை வாங்கி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, வேளாண் அதிகாரிகள், கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.

    தஞ்சையில் இன்று மாலை தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.

    அதன் பின்னர் டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றனர். அதன் அடிப்படையில் நெல்லின் ஈரப்பதத்தை எத்தனை சதவீதம் வரை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவிக்கும்.

    Next Story
    ×