search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடந்த ஆண்டை விட சி.பி.எஸ்.இ. தேர்ச்சி சதவீதம் குறைவு- கணிதம் கடினமாக இருந்ததால் மாணவர்கள் மார்க் குறைந்தது
    X

    கடந்த ஆண்டை விட சி.பி.எஸ்.இ. தேர்ச்சி சதவீதம் குறைவு- கணிதம் கடினமாக இருந்ததால் மாணவர்கள் மார்க் குறைந்தது

    • மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடந்த 2022-ம் ஆண்டு மொத்த தேர்ச்சி 92.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பில் 93.12சதவீதமும், 12-ம் வகுப்பு 87.33 சதவீதமும் பெற்றுள்ளன.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது. மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மண்டல அளவிலான தேர்ச்சியில் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், சென்னை 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

    12-ம் வகுப்பு தேர்வை 16,728 பள்ளிகளில் படித்த 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 பேர் எழுதினர். அவர்களில் 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்த தேர்ச்சி வீதம் 87.33 சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சியில் 5.38 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு மொத்த தேர்ச்சி 92.71 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வை 24,480 பள்ளிகளில் படித்த 21 லட்சத்து 65 ஆயிரத்து 805 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    அதில் 20 லட்சத்து 16 ஆயிரத்து 779 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.12சதவீதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1.28 சதவீதம் குறைந்துள்ளது.

    சி.பி.எஸ்.இ. தேர்வில் கணித தேர்வுதாள் கடினமாகவும், ஆங்கில தேர்வு விரிவானதாகவும் இருந்ததால் மாணவர்களால் வினாக்களை எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை.

    இதனால் அவர்களால் சரியான விடை அளிக்க முடியாமல் மார்க் குறைந்துள்ளது.

    நேரடியாக வினாத்தாள் கேள்விகள் கேட்கப்படாமல் தந்திரமாக, மறைமுகமான கேள்விகள் ஏராளமாக கேட்கப்பட்டிருந்தது. இதனால் பல பள்ளிகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான சென்டமே எடுத்துள்ளன.

    கணிதம் மதிப்பெண்கள் சரிவினால் இந்த ஆண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் கட்ஆப் மார்க் 195-க்கு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    கணித பாடம் கஷ்டமாக இருந்ததால் மாணவர்கள் சுமார் 10 சதவீதம் அளவுக்கு குறைவான மார்க் பெற்றுள்ளனர்.

    கொரோனா காலத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவும் இந்த 2 பாடங்களிலும் மாணவர்கள் குறைவான மார்க் பெற்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    இதுசம்பந்தமாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்:-

    இந்த ஆண்டு கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் அதிக சிந்தனை அடிப்படையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பாடத்தில் மாணவர்களின் மார்க் சதவீதம் குறைந்துள்ளது.

    வணிகம் உள்பட பிற துறைகளை சார்ந்த மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றார்.

    Next Story
    ×