search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அயோத்தி ராமர் கோவிலில் விரைவில் ஒலிக்கப்போகும் ஏரல் வெண்கல மணி
    X

    அயோத்தி ராமர் கோவிலில் விரைவில் ஒலிக்கப்போகும் ஏரல் வெண்கல மணி

    • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஏரல் என்ற சிறிய நகரத்திற்கு அயோத்தியில் ‘உயர்ந்த கவுரவம்’ கிடைக்க உள்ளது.
    • வெண்கலத்தால் 650 கிலோ எடை மற்றும் 4 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான மணி தயாரிக்கும் பணியை கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய ராமநாதன் இதற்காக தொழில்முறை கைவினைஞர்கள் 20 பேரை ஈடுபடுத்தினார்.

    செய்துங்கநல்லூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படையான திருச்செந்தூர், இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக கோலாகலமான தசரா நடைபெறும் குலசேகரன்பட்டினம், நவதிருப்பதி தலங்கள், தமிழகத்தின் எல்லோரா என அழைக்கப்படும் கயத்தாறு கோவில் என பல்வேறு ஆன்மீக தலங்களை கொண்டுள்ளது தூத்துக்குடி மாவட்டம்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஏரல் என்ற சிறிய நகரத்திற்கு அயோத்தியில் 'உயர்ந்த கவுரவம்' கிடைக்க உள்ளது. ஏனெனில் இந்த ஊரில் செய்யப்பட்ட மணி அங்குள்ள ராமர் கோவில் கருவறைக்கு மேலே தொங்கவிடப்படுகிறது.

    ஏரலில் 2 தலைமுறையாக செயல்பட்டு வருகிறது ராமகிருஷ்ணா நாடார் பாத்திரக்கடை. இதன் உரிமையாளராக ராமநாதன் என்பவர் உள்ளார். இவர் பாத்திரம் தயாரிப்பில் கடந்த 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

    இவர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கருவறைக்கு மேலே தொங்கவிடுவதற்காக பிரமாண்ட மணி ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

    வெண்கலத்தால் 650 கிலோ எடை மற்றும் 4 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான மணி தயாரிக்கும் பணியை கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய ராமநாதன் இதற்காக தொழில்முறை கைவினைஞர்கள் 20 பேரை ஈடுபடுத்தினார்.

    இந்த பிரமாண்ட மணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த சட்ட உரிமைக் குழுவைச் சேர்ந்த குழு, கேட்டு கொண்டதற்கு இணங்க உருவாக்கப்பட்டது.

    அப்போது அயோத்திக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு 2020-ம் ஆண்டு செப்டம்பரில் ராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பாத்திரக்கடை உரிமையாளர் ராமநாதன் கூறியதாவது:-

    உலோக பாத்திரங்கள் தயாரிப்புத் துறையில் 35 வருடமாக ஈடுபட்டு வருகிறேன். 2 தலைமுறையாக இந்த தொழில் செய்து வருகிறோம்.

    எனது 35 ஆண்டு பணியில் அயோத்திக்கு மணி என்பது எனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய தயாரிப்பு. பிரமாண்ட மணி தயாரிப்பிற்காக தொழிலாளர் செலவு மட்டும் ரூ. 2 லட்சம் செலவிடப்பட்டது.

    எங்களது கடையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விளக்குகள் (குத்து விளக்கு) உட்பட அதிகமான கோவில் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    அயாத்தி ராமர் கோவிலுக்கு மணி தயாரிப்பிற்கு பின்னர் திருச்செந்தூர் மற்றும் தஞ்சாவூர் கோவில்களில் இருந்து ஆர்டர் கிடைக்கும்.

    கோவில்கள் மட்டுமின்றி கேரளாவில் உள்ள தேவாலயங்களுக்கு ஏரலில் மணிகள் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரங்கள் மற்றும் கப்பல்கள் உற்பத்திக்கு தாயகமாக விளங்கும் ஏரல், கடல் மார்க்கமாக இலங்கையின் கொழும்புக்கு ஏற்றுமதி செய்வதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இன்னும், சில நூறு ஆண்டுகள் பழமையான பாத்திரங்கள் கடைகள் ஏரலில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×