என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெட்டிக்கடையில் மிட்டாய் திருடிய சிறுவர்களை கட்டி வைத்து தாக்குதல்: கடைக்காரர்-குடும்பத்தினர் மீது வழக்கு
- கடையின் வெளியே நின்ற 3 சிறுவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
- 2 சிறுவர்களை சந்தோசத்தின் குடும்பத்தினர் அங்கிருந்த கல் தூணில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோசம். இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார்.
இதனால் கடையை பாதி அளவுக்கு பூட்டி விட்டு கடைக்குள்ளேேய படுத்து ஓய்வெடுத்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பள்ளியில் படிக்கும் 5 சிறுவர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் சந்தோசத்தின் பெட்டிக் கடைக்குள் சென்று கடையில் இருந்த மிட்டாய்களை திருடி உள்ளனர்.
மற்ற 3 பேரும் கடைக்கு வெளியே நின்று யாரும் வருகிறார்களா? என நோட்டமிட்டபடி இருந்துள்ளனர். அப்போது திடீரென சந்தோசத்தின் பெட்டிக் கடைக்கு அவரது மகள் வந்தார். அவரை பார்த்ததும் கடையின் வெளியே நின்ற 3 சிறுவர்களும் அங்கிருந்து ஓடி விட்டனர்.
கடைக்குள் மிட்டாய் மற்றும் பொருட்களை திருடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர். கையும், களவுமாக சிக்கிய அவர் களை, சந்தோசத்தின் குடும்பத்தினர் அங்கிருந்த கல் தூணில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.
2 சிறுவர்களையும் கல்தூணில் தாக்கி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சிறுவர்களை தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால் திருமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஆலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தினர்.
சிறுவர்களை கட்டி வைத்து தாக்கி மிரட்டியதாக பெட்டிக்கடையின் உரிமை யாளர் சந்தோசம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






