search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் 93 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம்: கவர்னர் வழங்கினார்
    X

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் 93 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம்: கவர்னர் வழங்கினார்

    • தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
    • ஹிப்பாப் தமிழா ஆதி, மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார்.

    கோவை:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.

    விழாவில், தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 1,382 பேர் பி.எச்டி பட்டமும், 334 பேர் எம்.பில். பட்டமும் பெற்றனர்.

    மேலும், கலை பாடப்பிரிவில் 10 ஆயிரத்து 958 பேர், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16 ஆயிரத்து 907 பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் 36 ஆயிரத்து 856, கல்வியியல் பாடப்பிரிவுகளில் 846, வணிகவியல் பிரிவில் 27 ஆயிரத்து 469 என மொத்தம் 93 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

    இந்த விழாவில் இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் லாவ்லினா லிட்டில் பிளவர், பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில், திரைப்பட நடிகரும், இசை அமைப்பாளருமான ஹிப்பாப் தமிழா ஆதி, மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார்.

    விழாவில், அவர் பட்டம் பெற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    சென்னையை மையமாக வைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு என மியூசிக்கல் அகாடமி திறக்க உள்ளேன். இதற்காக தான் ஆராய்ச்சி படித்து பட்டம் பெற்றேன். தற்போது, பி.டி மாஸ்டர் என்ற திரைப்படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார்.

    Next Story
    ×