search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை: திற்பரப்பில் குளிக்க 4-வது நாளாக தடை
    X

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம். 

    குமரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை: திற்பரப்பில் குளிக்க 4-வது நாளாக தடை

    • மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.
    • தொடர் மழையின் காரணமாக களியல்-கடையால் பேரூராட்சி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் மாலையில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    அங்கு அதிகபட்சமாக 170 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆணைக்கிடங்கு, களியல், கோழிப்போர்விளை, குழித்துறை பகுதிகளிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலிலும் விடிய விடிய மழை பெய்தது.

    சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, குருந்தன்கோடு, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது. சிற்றாறு-1, சிற்றாறு-2, அணைகள் நிரம்பி வருவதையடுத்து சிற்றாறு-1 அணையில் இருந்து இன்று காலை 537 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மதகு வழியாக 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சிற்றாறு-1 அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. குழித்துறை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தரை பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5½ அடி உயர்ந்துள்ளது.

    தொடர் மழையின் காரணமாக களியல்-கடையால் பேரூராட்சி செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் குழித்துறை-ஆலஞ்சோலை சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மோதிரமலை குற்றியாறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37 அடியாக இருந்தது. அணைக்கு 1487 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.35 அடியாக உள்ளது. அணைக்கு 723 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு 1-அணை நீர்மட்டம் 16.76 அடியாக உள்ளது. அணைக்கு 1158 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து உபரி நீராகவும் மதகுகள் வழியாகவும் 737 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தால் கூடுதல் உபரி நீரை வெளியேற்றவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அணை நீர்மட்டத்தை அவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 16.86 அடியாக உள்ளது. அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பொய்கை அணையின் நீர்மட்டம் 9 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 43.14 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.30 அடியாக உள்ளது. தொடர்மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் யாரும் ஆறுகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Next Story
    ×