search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்
    X

    ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்

    • அடிகளாரைப் பராசக்தியின் சொரூபமாகவே காணும் பக்தர்கள், அவரை ‘அம்மா’ என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.
    • பங்காரு அடிகளாருக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

    ஆன்மிகப் பணிவுடன், பல சமூகப் பணிகளையும் செய்து, பல லட்சக்கணக்கான பக்தர்களைப் பெற்றிருந்தவர் மேல் மருவத்தூர் சித்தர் பீடத் தலைவரான பங்காரு அடிகளார்.

    மேல் மருவத்தூரில் துரைசாமி நாயக்கர் குடும்பம் செல்வாக்கானது. அவருடைய மகன் கோபால் நாயக்கர், நிலக்கிழார். கோபால் நாயக்கர்-மீனாம்பாள் தம்பதி மகனாக, 3-3-1942-ல் பங்காரு அடிகளார் பிறந்தார். இளமையிலேயே பக்தி மிக்கவராக விளங்கினார்.

    சோத்துப்பாக்கம் ஆரம்ப பள்ளியிலும், அச்சிறுபாக்கம் உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி பயின்றார். பின்னர் செங்கல்பட்டில் உள்ள அரசினர் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். உடனடியாக ஆசிரியர் வேலை கிடைக்காததால், சொந்தக்காலில் நிற்க விரும்பி, எலக்ட்ரீஷியனாக, பஸ் கண்டக்டராக, பஞ்சாய்த்து காண்டிராக்டராக சில காலம் பணியாற்றினார். பிறகு அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

    1966-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மிக பயங்கரமான புயல் வீசியபோது, மேல் மருவத்தூரில் இருந்த பால்வடியும் அதிசய வேப்ப மரம் வேராடு சாய்ந்தது. அந்த மரத்தின் அடியில் இருந்த புற்று மழையினால் கரைந்து, சுயம்பு வெளிப்பட்டது. அதுவரை வேம்புக்கும், புற்றுக்கும் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்து வந்த கோபால் நாயக்கர், இப்போது அந்த சுயம்புக்கு எளிய நிலையில் கூரை வேய்ந்து வழிபாடு செய்யத்தொடங்கினார். இந்தநிலையில் 1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு செவ்வாய் அன்று பங்காரு அடிகளார் முதன்முதலாக அருள்வாக்கு கூறினார். அதன் பிறகு புகழ் பரவத் தொடங்கியது. மேல் மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் படிப்படியாக வளர்ச்சி அடைந்தது.

    ஓலை வேய்ந்த ஆதிபராசக்தி கோவில், எழில் மிகு ஆலயமாக எழுந்தது. ஆன்மிகத் துறையில், அடிகளார் பெரும் புரட்சியே செய்தார் எனலாம். கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை வழக்கத்தை மாற்றி, பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று பூஜை நடத்தலாம் என்று அறிவித்து, இறைவனுக்கும், பக்தர்களுக்கும் இடையேயிருந்த இடைவெளியை நீக்கினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரை சேர்ந்த மன்றத்துப் பெண்மணிகள் பொறுப்பேற்று கோவிலைத் தூய்மைப்படுத்துவது, பக்தர்களுக்கு உணவு வழங்குவது போன்ற திருப்பணிகள் செய்ய வகை செய்தார்.

    அடிகளாரைப் பராசக்தியின் சொரூபமாகவே காணும் பக்தர்கள், அவரை 'அம்மா' என்றே அன்புடன் அழைத்து வந்தனர்.

    அடிகளாருக்கு 1968 செம்டம்பர் 4-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அவரை மணந்த லட்சுமி அம்மையார், உத்திரமேரூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஆசிரியைப் பயிற்சி பெற்று, கருங்குழி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர்.

    பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி முதல், இன்றைய அரசியல் தலைவர்கள் வரை, முக்கிய தலைவர்கள், பிரமுகர்களும் மேல்மருவத்தூர் வந்து அருளாசி பெற்று சென்றுள்ளனர்.

    30 ஆண்டுகளுக்கு முன், சிறிய குக்கிராமமாக விளங்கிய மேல்மருவத்தூர், இன்று ஒரு நகரமாக காட்சியளிக்கிறது.

    ஆதிபராசக்தி அறநிலை சார்பில் கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி முதலியவையும், மிக நவீன ஆஸ்பத்திரிகளும் நடத்தப்படுகின்றன.

    பங்காரு அடிகளாருக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.

    அடிகளாருக்கு அன்பழகன், செந்தில்குமார் என்ற 2 மகன்களும், தேவி, உமாதேவி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    Next Story
    ×