என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றாலம் மெயினருவியில் திரண்ட ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தை காணலாம்.
குற்றால அருவிகளில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்
- குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது.
- சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி இன்று மதியம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை முதல் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீரானதால் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை காட்டிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமே அதிகம் காணப்பட்டது.
குறிப்பாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வந்திருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி இன்று மதியம் 1 மணி அளவில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெறும் சபரிமலை ஐயப்பன் ஆபரண பெட்டியினை கண்டு வழிபட்டு செல்வதற்காகவும் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் தென்காசியில் முகாமிட்டுள்ளனர்.