என் மலர்
தமிழ்நாடு
உலக வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பயணம்- தொடங்கி வைத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு
- விபத்துகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் மூலம் தடுக்கப்படலாம்.
- போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு மிதிவண்டி தொடர் ஓட்ட பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தது மட்டுமில்லாமல் அவரும் அதில் பங்கெடுத்து கொண்டார்.
சென்னை:
உலக வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம், ஆசிய வாய்முக அறுவை சிகிச்சை மருத்து வச்சங்கத்தோடு இணைந்து மாபெரும் மிதிவண்டி பிரசார பயணம் நடைபெற்றது.
மக்களிடம் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மிதிவண்டி ஓட்ட பயணம் ஒன்பது நகரங்களில் சென்னை, வேலூர்,கோவை, சேலம், திருச்சி, மதுரை, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட 9 நகரங்களில் நடைபெற்றது.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவ சங்கத்தின் மாவட்ட செயலாளர் டாக்டர் க. அருண்குமார் கூறியதாவது:-
வாய் மற்றும் முக தாடை எலும்பு முறிவுகள் ஏற்பட 61.4 சதவீதம் காரணம் சாலை விபத்துகளே ஆகும். முக தாடை எலும்பு முறிவுகளை சீர் செய்வது வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர்களே ஆகும். இந்த விபத்துகள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் மூலம் தடுக்கப்படலாம். அதனால் தான் 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பிரசாரம் மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் மக்களை பயிற்றுவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு இந்த மிதிவண்டி தொடர் ஓட்ட பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தது மட்டுமில்லாமல் அவரும் அதில் பங்கெடுத்து கொண்டார் என்றார்.
இனிகோ இருதயராஜ் எம். எல். ஏ., சாலை பாதுகாப்பு பற்றிய பிரச்சார துண்டு பிரசுரங்களை மிதிவண்டி பிரசார பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கினார். மேலும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். ஆசிய வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் குணசீலன் ராஜன், மரு.ப.சுப்ரமணியன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் ஜெ.பாலாஜி, மண்டல ஒருங்கிணைப் பாளர் டாக்டர் மணி கண்டன், இந்திய வாய் முக அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க துணை தலைவர் டாக்டர் ச.ஜிம்சன், ஆசிய வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவர் சங்க இந்திய பிரதிநிதி மற்றும் தமிழ்நாட்டின் பல் மருத்துவ கல்லூரிகளின் வாய்முக அறுவை சிகிச்சை மருத்துவ பிரிவு துறை தலைவர்கள், பல்வேறு மருத்துவர்கள், பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மிதிவண்டி தொடர் ஓட்ட பயணத்தில் பங்கு கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அப்பல்லோ மருத்துவமனை, டெகத்லான் பெருங்குடி, அடையார் ஆனந்த பவன், தாகூர் பல் மருத்துவ கல்லூரி மற்றும் சிடார்ஸ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.