search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆலங்காயம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- ரூ.3½ லட்சம் தப்பியது
    X

    ஆலங்காயம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- ரூ.3½ லட்சம் தப்பியது

    • பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்ப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இங்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் பணம் இருந்த பகுதியை அவர்களால் உடைக்கமுடியவில்லை. அப்போது அங்கு வந்த பொதுமக்கள் நடமாட்டத்தால் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பொதுமக்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து எடுத்து சென்றனர். இதனால் அருகே கடையில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏ.டி.எம். அதிகாரி ஒருவர் வந்து ஆய்வு செய்தார். அவர் ஏ.டி.எம்மில் 4½ லட்சம் பணம் வைக்ப்பட்டிருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக தற்போது ரூ.3½ லட்சம் இருப்பதாக தெரிவித்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.3½ லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 4 ஏ.டி.எம். மையங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளை போனது.

    இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ரூ.67 லட்சம் பணம் மீட்கப்படவில்லை. இந்த வழக்கில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட தனிப்படை போலீசாரும் களம் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா தடை சம்பந்தமாக நேற்று திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை தெரிந்தவர்கள் மற்றும் எந்திரத்தை உடைப்பதில் கை தேர்ந்தவர்கள் தான் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×