search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு?- போலீசார் விசாரணை
    X

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு?- போலீசார் விசாரணை

    • மாணவ-மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
    • விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது 15 விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.
    மதுரை:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு, கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடந்தது.

    மாணவ-மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில், தொலைநிலைக் கல்வியின் கூடுதல் தேர்வாணையரின் அலுவலக கண்காணிப்பாளர் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு ஆய்வு செய்ய சென்றபோது, விடைத்தாள் கட்டுகள் சிதறிக்கிடந்தன. உடனடியாக துணைவேந்தர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது 15 விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரணை நடத்தியபோது பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆடு மேய்ப்பவர்கள் விடைத்தாள் கட்டுகளை திருடிச் சென்று இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் சார்பில் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் ராஜம்பாடியில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடையில் விடைத்தாள்களை சிலர் எடைக்கு போட்டு சென்றது தெரியவந்தது.

    அந்த விடைத்தாள் கட்டுகள் ஆலம்பட்டியில் செயல்படும் ஒரு பழைய பேப்பர் கடைக்கு அனுப்பட்டு, அதன் பின்னர் மதுரை வீரகனூரில் உள்ள மொத்த பேப்பர் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டபோது விடைத்தாள் கட்டுகளை ரோட்டோரம் கண்டெடுத்து அதனை கடையில் போட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    மேலும் விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் அதிகாரிகள் தூண்டுதல் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×