search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 நாட்களுக்கு பிறகு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பயங்கர இடி-மின்னலுடன் கனமழை
    X

    10 நாட்களுக்கு பிறகு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பயங்கர இடி-மின்னலுடன் கனமழை

    • நெல்லையில் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்தது. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து 3 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை மாநகர பகுதிகளில் நேற்று மாலை டக்கரம்மாள்புரம், கே.டி.சி.நகர், டவுன், பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இரவில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் கனமழை பெய்ய தொடங்கியது. பயங்கர இடி-மின்னலுடன் கனமழை பெய்ததால் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    பாளை பஸ் நிலையம், பெருமாள்புரம், தியாகராஜநகர், மகாராஜ நகர், கே.டி.சி.நகர், சமாதானபுரம், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி பாளையில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லையில் 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    இந்த கனமழையால் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் மழை நீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். டவுனில் நெல்லையப்பர் கோவில் ரதவீதி, பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. டவுன் வடக்கு ரதவீதியில் குளம்போல் தேங்கி கிடந்த தண்ணீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. புதிய பஸ் நிலையம் பகுதியில் மரம் முறிந்தது.

    தொடர்மழையால் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும் சிறப்பு வகுப்புகள் உள்பட எந்தவொரு வகுப்புக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு, மூலக்கரைப்பட்டி, ஏர்வாடி, நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் அதிகாலை முதலே பலமாக பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் லேசான மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், தளவாய்புரம், பரமன்குறிச்சி, காயாமொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை தொடங்கி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அங்கு 20 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    அதேபோல் ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. ஒருசில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    காயல்பட்டினம், கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. மாவட்டத்தில் திருச்செந்தூர், தூத்துக்குடி தாலுகாக்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    காடல்குடி, வேடநத்தம், வைப்பாறு, சாத்தான்குளம், மணியாச்சி, சூரன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே மாவட்டம் முழுவதும் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், மழைக்கான எச்சரிக்கை இருப்பதாலும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பதி உத்தரவிட்டுள்ளார்.

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை கருப்பாநதி அணை பகுதிகளில் மட்டும் 0.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    மாவட்டத்தில் பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகாலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. தொடர்மழை காரணமாக தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    Next Story
    ×