என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
அதிமுக எழுச்சி மாநாடு: தொண்டர்களை கவர்ந்த கண்காட்சி அரங்கம்
- ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது.
- அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது பிரமாண்டமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
பொன்விழா மாநாட்டில் அ.தி.மு.க. தொண்டர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அனைத்து அம்சங்களுடனும், தகவல்களுடனும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடி திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், அம்மா உணவகம் ஆகியவை குறித்து மாதிரிகளுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது, தொட்டில் குழந்தை திட்டம் போன்றவை குறித்தும் தகவல்களும், மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன. ஜெயலலிதாவை சமூக நீதி தலைவராக அடையாளம் காட்டிய 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்த தீர்மானம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தபட்டிருந்தது.
1989-ம் ஆண்டு சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் ஜெயலலிதாவின் சபதம் ஆகியவை குறித்தும் படங்கள் மூலம் விளக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சத்துணவு திட்ட அமைப்பாளராக இருந்தது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்த புகைப் படங்களும் இடம் பெற்றிருந்தன.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது, புதிய மாவட்டங்கள் மற்றும் வருவாய் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்து மாதிரிகளும், புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது.
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது பிரமாண்டமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலங்களில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் புகைப்படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கட்-அவுட்களும் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி அரங்கை தொண்டர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
நீண்ட காலமாக கட்சியில் உள்ள தொண்டர்கள் தங்கள் பழைய நினைவுகளை அங்கிருந்த படங்களை சுட்டிக்காட்டி அருகில் இருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அ.தி.மு.க. வரலாற்று அரங்கமாக கண்காட்சி அரங்கம் காட்சி அளித்ததாக தொண்டர்கள் கூறினர்.








