search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது; சிறுவன் காயம்

    • சூர்யா இருவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.
    • அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் தாட்கோ நகரில் 75 அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.

    இங்குள்ள 75 வீடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து குடியிருக்க தகுதியற்றவையாக மாறியுள்ளது. எனவே இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளையும் சீரமைத்து தரும்படி அங்கு வசிப்பவர்கள் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் தாட்கோ நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன்ராஜ் (33), அவரது மனைவி சுபத்ரா (26), மகள் சாதனா (10), மகன்கள் நித்தீஷ்குமார் (8), சூர்யா (6) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

    இன்று அதிகாலையில் சுபத்ரா தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் நித்தீஷ்குமார், சூர்யா இருவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.

    இதில் வீட்டின் மேல் கூரை சிறுவன் சூர்யா மீது விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    Next Story
    ×