search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்
    X

    மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல்

    • பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர்.
    • கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மலைக்கோ ட்டையில் தாயுமான சுவாமி கோவில் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இதில் மேலே அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும், கீழே அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதற்காக நேற்று காலையில் இருந்தே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக் காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து செல்லப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது.

    அதேபோல் காலை 10 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டு படையல் இடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக் கோட்டைக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் செய்து தீபாராதனைகள் நடந்தன.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 14 நாட்கள் வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    Next Story
    ×