என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேலம் பருப்பு குடோனில் 8 மணி நேரம் நடந்த வருமான வரி சோதனை
- சென்னையை சேர்ந்த சந்தீப் என்பவரது பருப்பு குடோன், சேலம் அன்னதானப்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவில் உள்ளது.
- குடோனை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை, அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம்:
பொது விநியோக திட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பருப்பு மற்றும் பாமாயிலை 5 நிறுவனங்கள் இறக்குமதி செய்கிறது. இவ்வாறு இறக்குமதி செய்ததில், ஒன்றிய அரசுக்கு பல ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 23-ந் தேதி தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் காமாட்சி அண்ட்கோ, அருணாச்சலம் இம்பெக்ஸ், பெஸ்ட்டால் மில், ஹிராஜ் டிரேடர்ஸ், இண்டர்கிரேடட் சர்வீஸ் புரொவைடர் என 5 நிறுனங்களில் இந்த ரெய்டு நடந்தது. இந்த அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த சந்தீப் என்பவரது பருப்பு குடோன், சேலம் அன்னதானப்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவில் உள்ளது. இது அ.தி.மு.கவை சேர்ந்த மோகன் என்பவருக்கு சொந்தமான குடோனாகும். இந்த குடோனை நேற்று முன்தினம் சோதனையிட, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அதிகாரிகளிடம் தகராறு செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து அங்கிருந்து அனைவரும் சென்றுவிட்டனர்.
இதுபோன்ற திடீர் எதிர்ப்பை எதிர்பாராத வருமான வரித்துறை அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர். குடோனை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை, அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காவலுக்கு இருந்த செக்யூரிட்டியிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.
இந்நிலையில் நேற்று, சென்னை வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் வம்சி கிருஷ்ணா சாரா, தர்மபுரி வருமான வரித்துறை அதிகாரி நாகராஜ் உள்பட 5 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பருப்பு குடோனுக்கு வந்தனர். ஏற்கனவே பிரச்சனை நடந்ததால் மாநகர காவல் துறையினரை பாதுகாப்புக்கு வரவழைத்து இருந்தனர். நேற்று மாலை 5 மணிக்கு பருப்பு குடோனுக்கு சென்ற அவர்கள், சீலை உடைத்து ஷட்டரை திறந்தனர். அதேபோல சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். வேறு யாராவது குடோனுக்கு வந்தார்களா? எனவும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு குடோனில் உள்ள பருப்பின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சூப்பர்வைசர் அழகுமுத்துவிடம் விசாரணை நடத்தினர்.
அங்கு 400 டன் பருப்பு இருப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நள்ளிரவு 1.30 மணிக்கு சோதனையை முடித்தனர். சுமார் 8 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






