என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பச்சை கிளிகள், முனியாஸ் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது
    X

    பச்சை கிளிகள், முனியாஸ் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது

    • பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால் குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
    • பச்சை கிளிகளை விற்பதும் வாங்குவதும் ஜாமினில் வர முடியாத 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.

    திருச்சி:

    திருச்சியில் பிரதான கடைவீதிகள் மார்க்கெட் சந்தைகளில் பச்சை கிளிகள் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது .இந்த தனிப்படையினர் திருச்சி மலைக்கோட்டை கடைவீதி, காந்தி மார்க்கெட், பொன்மலை சந்தை, உறையூர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் பாலக்கரை கீழப்புதூர், குருவிக்காரன் தெருவில் அதிரடியாக சோதனை செய்தார்கள். இதில் தனிஷ் சகாய ஜென்சி, சாந்தி, மணிகண்டன், கார்த்திக் ஆகியோர் தங்களது வீட்டில் விற்பனைக்காக பச்சைக்கிளிகள் 108, மற்றும் 30 முனியாஸ் பறவைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கூண்டு கம்பி-5, வலைகள்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை வேட்டையாடி கொடுத்த கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மேட்டுமருதூர் கிராமத்தை சேர்ந்த திருஞானம் என்பவரது வீட்டை சோதனை செய்து அவரிடமிருந்து 8 முனியாஸ் பறவைகள், வேட்டைக்கு பயன்படுத்திய இரு சக்கர மோட்டார் வாகனம் மற்றும் வலை பறிமுதல் செய்தனர்

    பின்னர் 5 பேரையும் கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 2 ஆஜர்படுத்தி 15 நாள் அடைப்பு காவல் உத்தரவு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த அதிரடி சோதனையில் உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், வன சரக அலுவலர்கள் கோபிநாத், தினேஷ், உசேன் வனவர்கள் பாலசுப்ரமணியன், துளசி மலை, சரண்யா, கஸ்தூரி பாய், வனக்காப்பாளர்கள் சரவணன், அரவிந்த், கருப்பையா, ஜீவானந்தம், சுமதி, நஸ்ருதீன் வன காவலர் சுகன்யா இடம் பெற்றிருந்தனர்.

    மாவட்ட வன அலுவலர் கூறுகையில், பொதுமக்கள் பச்சைக்கிளிகளை விரும்பி வாங்குவதால் குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பச்சை கிளிகளை விற்பதும் வாங்குவதும் ஜாமினில் வர முடியாத 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இதுகுறித்து தகவல் ஏதும் இருப்பின் வனச்சரக அலுவலர் தொடர்பு கொள்ளவும். தங்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×