search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாப்பாக்குடி அருகே 350 கிலோ குட்கா பறிமுதல்- மினி லாரியில் கடத்திய 2 பேர் கைது
    X

    பாப்பாக்குடி அருகே 350 கிலோ குட்கா பறிமுதல்- மினி லாரியில் கடத்திய 2 பேர் கைது

    • தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக பாப்பாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இடைகால், பள்ளக்கால் பொதுக்குடி உள்பட சுற்று வட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக பாப்பாக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் பாப்பாக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம், தலைமை காவலர் முத்துராஜ் ஆகியோர் ஒரு வாரத்திற்கு மேலாக பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மினி சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது லாரியில் சுமார் 28 மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்த காமராஜ் (வயது 45) மற்றும் மினி லாரி டிரைவர் குருவன்கோட்டை அம்பலத்தார் தெருவை சேர்ந்த சிவன் பெருமாள்(38) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்து, குட்கா மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

    கடந்த சில மாதங்களாக லோடு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் பள்ளக்கால் பொதுக்குடி, இடைகால், அம்பை என சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் இவர்கள் 2 பேரும் குட்கா விநியோகம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×