search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரதேசி பட பாணியில் கொத்தடிமைகளாக இருந்த 30 தொழிலாளர்கள் மீட்பு
    X

    மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை காணலாம்.

    பரதேசி பட பாணியில் கொத்தடிமைகளாக இருந்த 30 தொழிலாளர்கள் மீட்பு

    • கரும்பு தோட்டங்களில் பலர் ஆண்டுக்கணக்கில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்ததாக தாலுகா போலீசாருக்கு புகார் வந்தது.
    • எங்களை போலவே இப்பகுதியில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டு அவர்களது குடும்பத்துடன் சேர்க்கவேண்டும்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள நெய்காரப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் பெரியம்மாபட்டி, நெய்காரப்பட்டி, பெருமாள்புதூர் பகுதிகளில் உள்ள கரும்பு தோட்டங்களில் பலர் ஆண்டுகணக்கில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்ததாக தாலுகா போலீசாருக்கு புகார் வந்தது.

    இதனைதொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விழுப்புரம் மாவட்டம் வனவனூரை சேர்ந்த சண்முகம் என்ற புரோக்கர் மூலம் ஆட்களை பிடித்துவந்து இங்கு வேலைக்கு வைத்தது தெரியவந்தது. சண்முகத்தின் கீழ் சங்கர், பிரசாந்த் ஆகியோர் ஏஜெண்டுகளாக இருந்துள்ளனர். அவர்கள் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வறுமையில் வாடும் ஏழை மக்களை குறிவைத்து அவர்களுக்கு 3 வேளை உணவு, நல்ல சம்பளம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி இதுபோன்று தோட்டங்கள் மற்றும் சூளைகளில் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அதில் பெண்களும் வேலையில் இடம்பெற்று வந்துள்ளனர். இதனையடுத்து கோட்டாட்சியர் அவர்களிடம் விசாரணை நடத்தி பெண்கள் உள்பட 30 பேரை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் இன்று சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பரதேசி பட பாணியில் கொத்தடிமைகளாக வேலை பார்த்தவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அங்கு பணியில் இருந்த செல்வி என்பவர் தெரிவிக்கையில்,

    எனக்கு திருமணமாகி கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்காக நான் இங்கு வேலைக்கு வந்தேன். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்த பிறகும் எனது ஊருக்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. எங்களைப்போல் ஏராளமானோர் இங்கு கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகிறோம். குறைந்த உணவு, அதிக வேலை வாங்குவதால் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

    இங்கிருந்து யாரேனும் தப்பித்து செல்ல நினைத்தால் அவர்களை கரும்பால் அடித்து தாக்குகின்றனர். இதனால் எங்களை போலவே இப்பகுதியில் கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டு அவர்களது குடும்பத்துடன் சேர்க்கவேண்டும். எங்களுக்கு தொழில் தொடங்க அரசு ஏதேனும் உதவி செய்யவேண்டும் என்றார்.

    மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை காணலாம்.

    Next Story
    ×