search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3 சாமி சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு- தமிழகம் கொண்டுவர போலீசார் நடவடிக்கை
    X

    பூதேவி, விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகளை காணலாம்.

    3 சாமி சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு- தமிழகம் கொண்டுவர போலீசார் நடவடிக்கை

    • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘கவுண்டி ஆர்ட்’ என்ற அருங்காட்சியகத்தில், விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் இருப்பது தெரியவந்தது.
    • சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ள ஆலத்தூரில் பழமைவாய்ந்த வேணு கோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிலைகளில், செப்பு கலவையில் வடிவமைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளும் இருந்துள்ளன.

    இந்த 3 சாமி சிலைகளும் 50 ஆண்டுகளுக்கு முன்னால் கடத்தப்பட்டது. யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அதே இடத்தில், அந்த சிலைகளைப்போல், போலி சிலைகள் வைக்கப்பட்டன.

    இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி நாகராஜன், விக்கிரபாண்டியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினாலும், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    அதன்பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தினர். முதலில் மாயமான சிலைகளின் புகைப்படம் எதுவும் இருக்கிறதா? என்று ஆராய்ந்தனர். ஆனால், கோவில் அதிகாரிகளிடமோ, பிற பதிவேடுகளிலோ அந்த சிலைகளின் படங்கள் எதுவும் இல்லை.

    சிலைகளின் படங்கள் கிடைத்தால்தான், அதன் மூலம் மேற்கொண்டு விசாரணையை விரைவுபடுத்த முடியும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கருதினார்கள். அதிர்ஷ்டவசமாக 1959-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த சிலைகளின் அசல் படங்கள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

    அந்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு, உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களின் வலைதள பக்கங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடந்தது. நீண்ட தேடுதலுக்கு பிறகு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 'கவுண்டி ஆர்ட்' என்ற அருங்காட்சியகத்தில், விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் இருப்பது தெரியவந்தது.

    தற்போது அந்த சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிலைகளுக்கு உரிமைகோருவதற்கான ஆவணங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக அரசின் ஒப்புதலுக்காக இந்த ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த ஆவணங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்.

    அதன்பிறகு விரைவில் சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×