search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விசாரணை
    X
    விசாரணை

    கொடநாடு வழக்கு- ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை

    கொடநாட்டில் வேலைக்கு ஆட்களை நியமிப்பது யார் சி.சி.டி.வி கேமராக்களின் செயல்பாடு என பல்வேறு கேள்விகளை கேட்டு பூங்குன்றனிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடந்து வருகிறது. 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுவரை 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த வாரம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிடம் கொடநாடு வழக்கு குறித்து 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன், முன்னாள் உதவியாளரிடமும் விசாரணை நடந்தது.

    அதனை தொடர்ந்து கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகள் செய்த அ.தி.மு.க. நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி அவர் நேற்று காலை கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் விசாரணைக்கு ஆஜராரானார். அவரிடம் போலீசார் பல கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இன்று 2வது நாளாக போலீஸ் பயிற்சி மைதானத்தில் வைத்து அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியவர் பூங்குன்றன். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை சந்திக்க வருபவர்களை இவர் தான் அனுமதித்து வந்தார்.

    கொடநாடு எஸ்டேட் பற்றி நன்கு அறிந்தவர்களில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த பூங்குன்றனும் ஒருவர். மேலும் ஜெயலலிதா கொடநாடு செல்லும் போது இவரும் உடன் செல்வார்.

    இதனால் விசாரணையின்போது பூங்குன்றனிடம், கொடநாடு எஸ்டேட் கட்டமைப்பு, அங்கு என்னென்ன பொருட்கள் இருந்தன. என்ன ஆவணங்கள் இருந்தது. கொடநாட்டிற்கு ஜெயலலிதா வரும் போது அவரை யார்? யாரெல்லாம் பார்க்க வருவார்கள்? கொள்ளை சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா? கொள்ளை சம்பவத்தில் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா?

    கொடநாட்டில் வேலைக்கு ஆட்களை நியமிப்பது யார் சி.சி.டி.வி கேமராக்களின் செயல்பாடு என பல்வேறு கேள்விகளை கேட்டு அவரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தார். அவர் அளித்த தகவல்களை போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

    Next Story
    ×