என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம்- அமைச்சர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
திருச்செந்தூர்:
முதல்-அமைச்சர் உத்தரவுபடி தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட 10 கோவில்களில் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.
இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கலை அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் குமரதுரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
இதனையடுத்து கோவில் வடக்கு வாசலில் வைத்து பக்தர்களுக்கு மண்டல இணை ஆணையர் அன்புமணி பிரசாதம் வழங்கினார்.
இந்த திட்டம் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, புட்டமுது, எலுமிச்சை சாதம், வெண்பொங்கல் ஆகிய 5 பிரசாதங்கள் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் வெங்கடேசன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் ஏ.பி. ரமேஷ், கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






