என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போக்குவரத்து நெரிசல் (கோப்புப்படம்)
    X
    போக்குவரத்து நெரிசல் (கோப்புப்படம்)

    4 நாள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்- பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

    பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்குவதால் பெரும்பாலானோர் சொந்த ஊர் செல்லவில்லை. இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் இல்லை’ என்றனர்.


    தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டது.

    இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர 1200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனால் பஸ்கள், ரெயில்கள் மூலம் ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் பஸ்நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல் பெரும் பாலான பொதுமக்கள் கார்கள் உள்ளிட்ட தங்களது சொந்த வாகனங்கள் மூலம் ஊர்களுக்கு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. இதனால் ஊருக்கு சொந்த வாகனங்களில் சென்றவர்கள் நேற்று மாலையே சென்னை திரும்பத்தொடங்கினார்கள். இதனால் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் நேற்று சென்னைக்குள் வந்தன.

    இதன்காரணமாக செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சோதனை சாவடியில் நேற்று மாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல இரவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. ஏராளமான கார்களில் பொதுமக்கள் வந்ததால் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இந்த நெரிசல் ஏற்பட்டது.

    வழக்கமாக பரனூர் சோதனை சாவடியில் வாகனங்களில் வருபவர்கள் சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்கும் நிலை காணப்படும். ஆனால் நேற்று இரவு அதிக நெரிசல் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சுமார் 1½ மணிநேரத்துக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு வரை இதேநிலையே காணப் பட்டது.

    இன்று பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டதால் காலையில் நெரிசல் அதிகமாக காணப்படும் என்று நினைத்த வாகன ஓட்டிகள் நேற்று மாலையே சென்னை திரும்பியதால் இந்த நிலை ஏற்பட்டது.

    அதேநேரத்தில் பஸ்கள் மற்றும் ரெயில்களில் சொந்த ஊர் சென்ற பயணிகள் இன்று காலையில் சென்னை திரும்பினார்கள். பெரும்பாலான வாகனங்கள் நேற்று மாலையே வந்துவிட்டதால் இன்று காலையில் எந்த பாதிப்பும் இல்லாமல் பொதுமக்கள் சென்னை திரும்பினார்கள்.

    பெருங்களத்தூரிலும் இன்று காலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. போக்குவரத்து வழக்கம்போல காணப்பட்டது.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் லட்சக்கணக்கில் சொந்த ஊர் செல்வார்கள். அப்போது சென்னை திரும்பும் போது பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும்.

    ஆனால் தற்போது பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்குவதால் பெரும்பாலானோர் சொந்த ஊர் செல்லவில்லை. இதனால் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் இல்லை’ என்றனர்.

    Next Story
    ×