என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் மூலம் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 2 மடங்கு அதிகரிக்கும்- ஆடை உற்பத்தியாளர்கள் தகவல்
திருப்பூர்:
இந்தியா -ஆஸ்திரேலியா இடையே பொருளாதார வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தை நடந்து வந்தது. இருதரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தோ -பசுபிக் பிராந்தியத்தின் முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் இது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பொருட்கள், சேவை ஏற்றுமதிக்கான வர்த்தக வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்.
கடந்த 2021-22ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி ரூ.55 ஆயிரத்து 500 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தைவிட 100 சதவீதம் அதிகமாகும்.
நமது நாட்டின் மருந்து, ஆடை, ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல், வாகன உதிரிபாகங்கள், ரத்தினக்கல் மற்றும் ஆபரணம் உற்பத்தி துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் கூடுதல் நன்மை அளிக்கும். இரு நாடுகளிலும் சுற்றுலா போக்குவரத்து அதிகரிக்கும்.
ஆஸ்திரேலிய சந்தையில் சமநிலை உருவா போட்டியாளர்களை எதிர்கொண்டு சந்தை வாய்ப்புகளை கைப்பற்றுவது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு எளிதாகும் என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், இந்தியா -ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்காக வர்த்தகம் மற்றும் ஜவுளி அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இந்திய ஏற்றுமதி துறைக்கு இந்த ஒப்பந்தம் புதிய ஊக்கம் அளிக்கிறது. இதன் வாயிலாக வருகிற 2030ல் நாட்டின் ஏற்றுமதி ரூ.75 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டி விடும். கடந்த 2021-22ம் நிதியாண்டில் நமது நாட்டில் இருந்து ரூ. 925 கோடி மதிப்பிலான பின்னலாடை ரகங்கள், ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளன. நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் இது 2 சதவீதம். திருப்பூரிலிருந்து ரூ. 630 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. புதிய வர்த்தக வாய்ப்புகள் வாயிலாக அடுத்த 2 ஆண்டுகளில் அந்நாட்டுக்கான திருப்பூரின் ஏற்றுமதி இரட்டிப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






