search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாகை-நாகூர் நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
    X
    நாகை-நாகூர் நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

    நாகையில் தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை- நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்கு

    நாகையில் தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி, சித்ரா தம்பதியினரின் 3வது மகள் சுபாஷினி.

    இவர் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வருகிறார். இந்நிலையில் முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மீதமுள்ள 55 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் மாணவிகளை வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு மாணவி சுபாஷினி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பாசோதனைக்காக மாணவியின் உடலை அனுப்பி வைத்தனர்.

    மாணவி தற்கொலையால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நாகூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி தொல்லை கொடுத்து, மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கல்லூரி கட்டணம் கட்டக்கூறி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளின் தற்கொலை சம்பவம் தொடர் கதையாகி வருவது வேதனையளிக்கிறது என்று உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேதனையுடன் கூறினர்.

    இந்நிலையில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி வாசலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

    இந்நிலையில் நாகூர் போலீஸ் நிலையத்தில் மாணவி சுபாஷினி பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கல்லூரி தாளாளரும் , நாகை ஊர்காவல் படை மண்டல தளபதியுமான ஆனந்த், கல்லூரி முதல்வர் லட்சுமி காந்தன், பிசியோதெரபி வகுப்பாசிரியர் ஜென்சி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.

    Next Story
    ×