search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மாநகராட்சி மேயர் கல்பனா புத்தகம் வழங்கி வரவேற்றார்.
    X
    கோவை வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மாநகராட்சி மேயர் கல்பனா புத்தகம் வழங்கி வரவேற்றார்.

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தென்மண்டல துணை வேந்தர்கள் கூட்டம் இன்று தொடங்கியது

    பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்தல், அடுத்த 3 ஆண்டுகளில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு தேவையான கல்வியை அளித்தல், டிஜிட்டல் டிரான்ஸ்மிஷினை புகுத்துதல் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    வடவள்ளி:

    இந்திய பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் துணை வேந்தர்களை அழைத்து, உயர்கல்வி மேம்பாடு குறித்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு 2 நாள் கூட்டம் இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் நிலையான முன்னேற்ற குறிக்கோள்களை அடைய இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் மூலமாக அனைவருக்கும் தரமான, சமமான கல்வி, உறுதியான கல்வி என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் தென் மண்டலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

    உயர் கல்வியில் உள்ள சவால்கள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்தல், அடுத்த 3 ஆண்டுகளில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு தேவையான கல்வியை அளித்தல், டிஜிட்டல் டிரான்ஸ்மிஷினை புகுத்துதல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    பின்லாந்து நாட்டில் உயர் கல்விக்கு கட்டணம் இல்லை. இதுபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படுத்த தேவையான வி‌ஷயங்கள் குறித்தும் துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் காளிராஜ், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தலைவர் திருவாசகம், பொதுச்செயலாளர் பங்கஜ் மிட்டல் மற்றும் தென்மண்டலத்தை சேர்ந்த 100 துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று தொடங்கிய தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டம் நாளையும் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் முன்வைக்கப்பட உள்ளதாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×