என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக-வினர் மறியல்
    X
    அதிமுக-வினர் மறியல்

    சாவி தொலைந்த விவகாரம்- மறுதேர்தல் நடத்த கோரி அ.தி.மு.க.வினர் மறியல்

    கடலூர் மாநாகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அன்று இரவு கடலூர் மஞ்சக்குப்பம் புனிதவளனார் பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் 45 வார்டுகளிலும் பதிவான வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

    அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பாக அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இந்த பாதுகாப்பு அறையை திறந்து வாக்கு எந்திரங்களை, வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் வேட்பாளர்கள், முகவர்கள் வந்தனர்.

    அப்போது அந்த பாதுகாப்பு அறையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டிற்கான சாவி தொலைந்து விட்டதாக ஊழியர்கள் கூறினர். இதனால் எந்திரம் மூலம் அந்த அறை பூட்டை அறுத்து கதவை திறந்து மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் காலை 8.50 மணிக்கு பிறகு கடலூர் மாநாகராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மாநாகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 34 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், பா.ஜ.க., சுயேட்சைகள் 5 வாடுகளிலும் வெற்றி பெற்றனர்.

    இன்று கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் உழவர்சந்தை அருகே திரண்டனர்.

    பாதுகாப்பு அறையின் பூட்டை எந்திரம் மூலம் அறுத்து திறந்தது குறித்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து அந்த அறையை திறந்துள்ளனர்.

    எனவே கடலூர் மாநாகராட்சிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அ.தி.மு.க.வினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×