என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிவகங்கை நகராட்சியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 4 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 3 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது.
தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் அ.தி.மு.க. 10 வார்டுகளிலும், தி.மு.க. 5 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 வார்டுகளிலும், அ.ம.மு.க. 5 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். அங்கு மட்டும் எந்தக் கட்சி பெரும்பான்மையை பெறும் என்பதில் இழுபறி நிலவுகிறது.
இந்நிலையில் சிவகங்கை நகராட்சியில் வெற்றி பெற்ற 4 வேட்பாளர்கள், வெற்றி பெற்ற கையோடு தி.மு.க.வில் இணைந்தனர்.
22வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன், 4வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் சேது நாச்சியார், 19வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் பாக்கியலட்சுமி, 23வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் ராஜபாண்டி ஆகிய 4 பேரும் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்கள் 4 பேரையும் சால்வை அணிவித்து அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.






