search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- உடுமலை வனப்பகுதியில் முதல்முறையாக வாக்குச்சாவடிகள் அமைப்பு

    திருமூர்த்தி மலையடிவார பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு 17-வது வார்டாக உருவாக்கப்பட்டு அங்கு 193 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி, குழிப்பட்டி, பூச்சிக்கொட்டாம்பாறை, குருமலை, மேல் குருமலை, திருமூர்த்திமலை, ஈசல் திட்டு, ஆட்டுமலை, பொறுப்பாறு, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கரட்டுப்படி என 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இக்குடியிருப்புகளில் 3,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் மட்டும் மலைவாழ் மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும், உள்ளாட்சி அமைப்புகள் வழியாக குடிநீர், சாலை, குடியிருப்பு என அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து மலைவாழ் மக்களுக்கு முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது.

    தளி பேரூராட்சி வார்டு மறுவரை செய்யப்பட்டு ஏற்கனவே இருந்த 15 வார்டுகளுடன் கூடுதலாக 16 மற்றும் 17 என 2 வார்டுகள் இணைக்கப்பட்டு தற்போது 17 வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை, மேல்குருமலை ஆகிய மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை இணைத்து 16-வது வார்டு உருவாக்கப்பட்டது. இங்கு 420 வாக்காளர்கள் உள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக வனத்துறை ‘வாட்ச் டவர்’ வாக்குப்பதிவு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

    இங்கு மின் வசதி இல்லாத நிலையில் ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள், அலுவலர்கள் செல்வதற்கான ஜீப் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

    அதே போல் திருமூர்த்தி மலையடிவார பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு 17-வது வார்டாக உருவாக்கப்பட்டு அங்கு 193 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இங்குள்ள ஆரம்ப பள்ளியில் வாக்குச்சாவடி முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் குடியிருப்பில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். மேலும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பூச்சிகொட்டாம்பாறை மலைவாழ் மக்களிடம் தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்வது குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    Next Story
    ×