என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தருமபுரி பூ மார்க்கெட்டில் குவிந்துள்ள ஓசூர் ரோஜாக்கள்
    X
    தருமபுரி பூ மார்க்கெட்டில் குவிந்துள்ள ஓசூர் ரோஜாக்கள்

    காதலர் தினத்தையொட்டி ஓசூர் ரோஜாக்களுக்கு கடும் கிராக்கி

    பருவநிலை மாற்றத்தால் கடந்த 1-ந் தேதி தொடங்க வேண்டிய ரோஜா பூக்கள் சாகுபடி ஒரு வாரத்துக்கு முன்பே ஜனவரி 22-ந் தேதி தொடங்கி விட்டது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் 2000 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து ரோஜாக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

    தாஜ்மகால், பீச் அவலன்ச், நோப்ளஸ், கோல்டு ஸ்டிரைக், சாவ்ரின், ராக் ஸ்டார், ஸ்வீட் அவலன்ச் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தின் போது வெளிநாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் தாக்கத்தால் குறைந்த அளவில் மட்டுமே ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு கடந்த 4-ந் தேதி ஏற்றுமதி தொடங்கியது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைத்தன. இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானம் உள்ளூர் சந்தையிலும் கிடைப்பதால் விவசாயிகள் ஏற்றுமதியில் ஆர்வமின்றி உள்ளனர்.

    இதுபற்றி ஓசூர் சிறுகுறு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒரு ரோஜா 16 முதல் 20 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகூர்த்த நாட்கள் அதிகமாக வருவதால் உள்ளூர் சந்தையிலேயே அதே விலை கிடைக்கிறது. மேலும் ரோஜாக்களை ஏற்றுமதி செய்தால் அதற்குரிய பணம் கைக்கு வந்து சேர ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஆனால் உள்ளூர் சந்தையில் உடனே பணம் வந்துவிடும். மேலும் விமான கட்டணமும் உயர்ந்து விட்டதால் உலக சந்தையில் ஓசூர் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

    மேலும் பருவநிலை மாற்றத்தால் கடந்த 1-ந் தேதி தொடங்க வேண்டிய ரோஜா பூக்கள் சாகுபடி ஒரு வாரத்துக்கு முன்பே ஜனவரி 22-ந் தேதி தொடங்கி விட்டது. ஆனால் போதிய பூக்கள் இல்லை. இதன் காரணமாக ரோஜாக்கள் விலை இந்தாண்டு உயர்ந்துள்ளது.

    தற்போது 20 ரோஜாக்கள் கொண்ட கட்டு ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×