search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
    X
    விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்

    விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 2 மணிக்கே விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். இத்தலம் இறைவனுக்கு ‘பழமலைநாதர்’ என்ற பெயரும் உண்டு.

    பிரம்மதேவனும், அகத்தியரும் வழிபாடு செய்த இந்த ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் கொண்ட சிறப்புமிக்கது. முன்காலத்தில் இத்தல இறைவன் மலையாக காட்சியளித்தவர் என்பதால் இவருக்கு ‘முதுகுன்றீஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. இந்த ஊரும் முன்காலத்தில் ‘திருமுதுகுன்றம்’ என்றே அழைக்கப்பட்டுள்ளது.

    இத்தல அம்பாளின் திருநாமம், பெரியநாயகி என்பதாகும். ‘விருத்தாம்பிகை’ என்றும் அழைக்கப்படுகிறார். குரு நமச்சிவாயத்திற்கு இளமையாக காட்சி கொடுத்ததால், ‘பாலம்பிகை’, ‘இளைய நாயகி’ என்ற பெயரும் உண்டு. புண்ணிய தலமாகவும், முக்தி தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், காசியை விடவும், மிகவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த கோவிலில் 5 நந்தி, 5 பிரகாரம், 5 கோபுரங்கள், 5 தீர்த்தம் என அனைத்தும் 5 ஆக அமையப்பெற்றது தனி சிறப்பாகும். அந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2002-ம் ஆண்டு நடந்தது. இதையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான விழா கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. கடந்த 2-ந் தேதி மணிமுக்தா ஆற்றில் இருந்து யாக சாலை பூஜைக்கான தீர்த்தம் யானை மீது வைத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    3-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று 4-ம் கால யாகசாலை, 5-ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இன்று (6-ந்தேதி) காலை 4 மணிக்கு 6-ம் கால யாக பூஜைகள், காலை 5 மணிக்கு பரிவார யாகங்கள், பூர்ணா ஹூதி, பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 7 மணிக்கு பிரதான மூர்த்திகளுக்கு மகா பூர்ணாஹூதி, காலை 7.15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 8.15 மணிக்கு கோபுரங்கள், விமானங்கள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 8.30 மணிக்கு மூலவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை 2 ஆயிரம் கோவில்களுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்திய சிறப்பு பெற்ற பிச்சை குருக்கள் நடத்தி வைத்தார். அப்போது கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் நின்ற பக்தர்கள் மீது புனிநீர் தெளிக்கப்பட்டது.

     விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்

    கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 2 மணிக்கே விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் 4 வீதிகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    இன்று அதிகாலையில் கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்குள் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பக்தர்கள் நின்ற இடத்தை விட்டு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதையொட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவரும் ஜெயின் ஜூவல்லரி அதிபருமான அகர்சந்த், அமைச்சர் கணேசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×