search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    கொத்து புரோட்டா இல்லை என்றதால் மெஸ் உரிமையாளர் மீது தாக்குதல் - போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது

    ஈரோடு அருகே கொத்து புரோட்டோ இல்லை என கூறிய மெஸ் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (46). இவர் அதே பகுதியில் கடந்த 8 வருடமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சம்பவத்தன்று இரவு 10.50 மணியளவில், சங்கு நகர் பகுதியைச் சேர்ந்த ஆசிக், ரசூல் ஆகிய 2 பேரும் சாப்பிட வந்துள்ளனர்.

    அப்போது 2 பேரும் சாப்பிட கொத்து புரோட்டா கேட்டுள்ளனர். அதற்கு கடையில் பணியாற்றும் பணியாளர் கடையை மூடும் நேரம் வந்துவிட்டதால் கொத்து புரோட்டா இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிக் மற்றும் ரசூல் நாங்கள் யார் என்று தெரியுமா என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆசிக், தான் போலீஸ்காரரின் தம்பி என கூறி அவரது அண்ணன், ஆயுதப்படைக்காவலரான உமர்பாரூக் (24) என்பவருக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு தனது நண்பரான இரட்டைபாளி வலசு பகுதியைச் சேர்ந்த, கார் பெயிண்டரான கார்த்தி (26) என்பவருடன் வந்த உமர்பாரூக் ஓட்டல் உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

    அப்போது உமர்பாரூக் அங்கிருந்த சேரை எடுத்து ஓட்டல் உரிமையாளர் ஈஸ்வரனை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயுதப்படை போலீஸ்காரர் உமர்பாரூக், அவரது தம்பி ஆசிக், நண்பர் ரசூல் ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களது நண்பர்களில் ஒருவரான கார்த்தி தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரைத்தேடி வருகின்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆயுதப்படை போலீஸ்காரர் உமர்பாரூக் கைது செய்யப்பட்ட தகவல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×