search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை
    X
    ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை

    முழு ஊரடங்கால் டெல்டா மாவட்டங்கள் முடங்கியது

    நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் இன்று அத்தியாவசிய வாகனம் தவிர மற்ற வாகனங்கள் இயங்கவில்லை.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரந்தோறும் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிப்பாட்டு தலங்கள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி இன்றும் 3-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இதனை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காய்கறி, மளிகை, பேன்சி உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் அடைக்கப்பட்டது. சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டாஸ்மாக்கும் மூடப்பட்டது.

    தஞ்சையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காந்திஜி சாலை, கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடின. மேலும் பல்வேறு இடங்களில் போலீசார் பேரிகார்டு வைத்து அடைத்து சோதனை பணியில் ஈடுபட்டனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

    இதேப்போல் கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாம், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சாலைகள் வெறிச்சோடின.

    திருவாரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று இரவே அனைத்து பஸ்களும் அந்தந்த பணிமனைக்கு சென்றன. இன்று மருத்துவ வாகனம் மட்டும் இயங்கியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது.

    இன்று திருமண முகூர்த்த நாள் என்பதால் திருமணத்திற்கு செல்வோருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. திருமண பத்திரிகையுடன் வருபவர்களை மட்டும் போலீசார் ஆய்வு செய்து அனுமதித்தனர். இதனால் சாலைகளில் திருமணத்திற்கு செல்வோரின் இருசக்கர வாகனங்களும், கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் சென்று வந்தன. பெரும்பாலான திருமணங்கள் குறிப்பிட்ட தேதியில் இன்று நடைபெற்றது.

    நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் இன்று அத்தியாவசிய வாகனம் தவிர மற்ற வாகனங்கள் இயங்கவில்லை. வெளியூரில் இருந்து மாவட்டத்துக்கு வந்த லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவே போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள தொடங்கினர். இன்று கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வந்தவர்களுக்கும், முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதித்தனர்.

    ஒட்டு மொத்தத்தில் முழு ஊரடங்கால் டெல்டா மாவட்டம் முடங்கியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. இருப்பினும் வெளியூரில் இருந்து தொலைத்தூர பஸ்கள், ரெயில்களில் வரும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் ஆட்டோ, வாடகைகாரர்கள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×