search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி கிடக்கும் பனியன் நிறுவனம்.
    X
    வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி கிடக்கும் பனியன் நிறுவனம்.

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தப்போராட்டம் - ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

    நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.
    திருப்பூர்:

    நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் இன்று முதல் 2 நாட்கள் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. திருப்பூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 8 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். 

    இந்தநிலையில் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நூல் விலை அபரிமிதமாக உயர்ந் துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தி யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.

    செயல்படாமல் உள்ள பிரிண்டிங் நிறுவனம்.
    செயல்படாமல் உள்ள பிரிண்டிங் நிறுவனம்.

    மேலும் வர்த்தக போட்டிகளால் ஆடை விலையை உயர்த்த முடியாமலும், வெளிமாநிலம், வெளி நாட்டு வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிக்க முடியாமலும் தொழில்துறையினர் தவித்து வருகின்றனர். 
    பருத்தி பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஆடை உற்பத்தி துறையை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் தொழில்துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் இன்று மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை)ஆகிய 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

    அதன்படி இன்று முதல் 2 நாட்கள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள், டையிங் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் முழுமையாக அடைக்கப்பட்டன. 

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இன்று ஒருநாள் மட்டும் ரூ.200 கோடி அளவுக்கு பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நூல் விலை உயர்வு, திருப்பூர் பின்னலாடை துறையை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது. கடந்த 2020 அக்டோபர் முதல் இம்மாதம் வரையிலான 15 மாதங்களில், கிலோவுக்கு 190 முதல் 200 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்துள்ளது. 

    கிலோ 230 ரூபாயாக இருந்த 40ம் நம்பர் ஒசைரி நூல், தற்போது 400 ரூபாயாக உள்ளது.நூல் விலையின் இந்த போக்கு, ஒட்டுமொத்த ஜவுளித்துறையையும், சீர்குலைத்துவிடும். தொ ழிலை பாதுகாக்கவேண்டி, மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, இரண்டு நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.மத்திய அரசு, பருத்தி பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை ரத்து செய்யவேண்டும்.

    பஞ்சு, நூல், துணி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கவேண்டும். இதுகுறித்து மத்திய அமைச் சர்களுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பிவருகிறோம். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ்கோயலை நேரில் சந்தித்து முறையிடவும், முயற்சித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
    Next Story
    ×